ஆசிரியர்-அரசு ஊழியர்கள் சாலை மறியல் பெண்கள் உள்பட 1,040 பேர் கைது


ஆசிரியர்-அரசு ஊழியர்கள் சாலை மறியல் பெண்கள் உள்பட 1,040 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2017 4:15 AM IST (Updated: 13 Sept 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்-அரசு ஊழியர்களில் பெண்கள் உள்பட மொத்தம் 1,040 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ‘நீட்“தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்- அரசு ஊழியர்கள் கடந்த 7-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி போராட்டம் நடத்த கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று காலை திரண்டனர். பாதுகாப்பு பணிக்காக துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

கோரிக்கைகள் தொடர்பாக சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகா விஷ்ணன் தலைமை தாங்கினார். கோரிக்கைகள் தொடர்பாக சங்க நிர்வாகிகள் பலர் பேசினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேன் மற்றும் பஸ்களில் ஏற்றினர். இதில் பெண்கள் 680 பேர் உள்பட மொத்தம் 1,040 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆசிரியர்-அரசு ஊழியர்களின் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. தொடர்ந்து ஆசிரியர்- அரசு ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

Related Tags :
Next Story