கடையம் அருகே பரிதாபம்: காதலியை அரிவாளால் வெட்டிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


கடையம் அருகே பரிதாபம்: காதலியை அரிவாளால் வெட்டிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Sept 2017 2:00 AM IST (Updated: 13 Sept 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே காதலியை அரிவாளால் வெட்டிய வாலிபர் போலீசார் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடையம்,

கடையம் அருகே காதலியை அரிவாளால் வெட்டிய வாலிபர் போலீசார் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல்

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் சரவணன்(வயது 26). இவர் திருவனந்தபுரத்தில் தங்கி இருந்து ஒரு பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரும், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ராஜாங்கபுரம் நடுத்தெருவை சேர்ந்த தபசு மகள் கல்பனாவும்(25) கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரவணன் தனது பெற்றோருடன், கல்பனா வீட்டிற்கு சென்று கல்பனாவை பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கல்பனாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இருந்தாலும் இருவரும் தினமும் செல்போன் மூலம் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

வாக்குவாதம்

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவரும் செல்போனில் பேசியதாக தெரிகிறது. அப்போது கல்பனா இனிமேல் நீ என்னிடம் பேச வேண்டாம் என்று சரவணனிடம் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சரவணன் நேற்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து தனது ஊருக்கு வந்தார்.

பின்னர் கல்பனாவை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ராஜாங்கபுரத்திற்கு சென்றார். அங்கு கல்பனா வயல் வேலைக்கு சென்றிருப்பதை அறிந்து அங்கு அவரை தேடி சென்றார். கடனா அணை அருகே வயல் வேலைக்கு செல்வதற்காக 20 பேருடன் கல்பனா அங்கு நின்று கொண்டிருந்தார்.

அரிவாளால் வெட்டினார்

அங்கு வந்த சரவணன், கல்பனாவிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அரிவாளை எடுத்து கல்பனாவை சரமாரியாக வெட்டினார்.

இதில் அவருக்கு கை, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. பலத்த வெட்டுப்பட்ட கல்பனா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சரவணனை சத்தம் போடவே அவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார்.

தூக்கில் தொங்கினார்

இதுகுறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் கடையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்பனாவை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி கல்யாணிபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு சரவணன் தூக்கில் பிணமாக தொங்கினார். போலீசுக்கு பயந்து சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மேல் விசாரணை நடத்தி வருகின்றார்.

காதலியை அரிவாளால் வெட்டிய வழக்கில் போலீசார் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story