செல்போனில் வங்கி அதிகாரிபோல் பேசி மேல்மலையனூர் கிராம குழு கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் அபேஸ்
வங்கி அதிகாரிபோல் பேசி மேல்மலையனூர் கிராம குழுவின் கணக்கில் இருந்து ரூ.1½ லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
மேல்மலையனூரில் கிராமத்தை சேர்ந்த சிலர் ஒருங்கிணைந்து கிராம குழுவை நடத்தி வருகின்றனர். இதற்கு தலைவியாக ரபேக்கா(வயது 55) என்பவரும், பொருளாளராக மதியழகனும் செயல்பட்டு வருகின்றனர். இந்த குழுவிற்காக மேல்மலையனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்றில் கணக்கு ஆரம்பித்து குழு சம்பந்தமாக பண பரிவர்த்தனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த குழுவின் பொருளாளரான மதியழகனின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் வங்கியில் இருந்து அதிகாரி பேசுவதாகவும், தங்களது குழுவின் வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என்று கூறி அவரிடமிருந்து கிராம குழுவின் வங்கி கணக்கு எண்ணை கேட்டார்.
இதை நம்பிய மதியழகன், கிராம குழுவின் வங்கி கணக்கு எண்ணை அந்த நபரிடம் கொடுத்தார். பின்னர், மதியழகன் ஏற்கனவே வங்கியில் கொடுத்திருந்த அவரது செல்போன் எண் மூலம் இணையதளம் வழியாக பண பரிவர்த்தனை செய்வதாக கூறினார்.
மேலும் மதியழகனின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக வந்த ரகசிய எண்ணின் விவரங்களை அந்த நபர் பெற்றுவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் கிராம குழுவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் எடுக்கப்பட்டதாக மதியழகனின் செல்போன் எண்ணுக்கு தகவல் வந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து குழுவின் தலைவி ரபேக்காவிடம் தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நேவிஸ்அந்தோணிரோஸி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி அதிகாரிபோல் பேசி நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.