கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 1,200 பேர் கைது


கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 1,200 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2017 4:15 AM IST (Updated: 13 Sept 2017 1:43 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,200 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடின. இதேபோல் அரசு பள்ளி ஆசிரியர்களும் அதிக அளவில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் பெரும்பாலான அரசு பள்ளிகள் நேற்று ஆசிரியர்கள் வருகையின்றி காணப்பட்டன. அரசு துறை அலுவலகங்களில் பணிகள் முடங்கின.

வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இவர்கள் தர்மபுரி-சேலம் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அரசு கலைக்கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கனகராஜ், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பொன்ரத்தினம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கவுரன், பட்டுவளர்ச்சிதுறை அலுவலர் சங்க மாநில தலைவர் சிவப்பிரகாசம், உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

அப்போது அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மதிப்பூதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றை ரத்து செய்து அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார், சாலைமறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1,200 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தர்மபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். 

Related Tags :
Next Story