பரப்பன அக்ரஹாரா சிறையில் போலீஸ் மந்திரி திடீர் ஆய்வு கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என பேட்டி


பரப்பன அக்ரஹாரா சிறையில் போலீஸ் மந்திரி திடீர் ஆய்வு கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என பேட்டி
x
தினத்தந்தி 13 Sept 2017 2:30 AM IST (Updated: 13 Sept 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நேற்று போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி ஆய்வு செய்தார்.

பெங்களூரு,

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நேற்று போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் பேட்டியளித்த அவர் சிறையில் கைதிகள் யாருக்கும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என கூறினார்.

சிறையில் மந்திரி ஆய்வு

கர்நாடகத்தில் புதிய போலீஸ் மந்திரியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமலிங்க ரெட்டி பதவி ஏற்றார். இந்த நிலையில் நேற்று திடீரென்று அவர் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சிறையில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள், சமையல் அறை, மருத்துவமனை உள்பட அனைத்து இடங்களையும் அவர் ஆய்வு செய்தார். விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. என்.எஸ்.மேகரிக் உள்பட சிறை அதிகாரிகளுடன் ராமலிங்க ரெட்டி ஆலோசனை நடத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. சிறையில் ஆய்வை முடித்து வெளியே வந்த மந்திரி ராமலிங்க ரெட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

சிறப்பு வசதிகள் இல்லை

பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு வந்து ஆண், பெண் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறை அறைகளை பார்வையிட்டேன். சமையல் அறை, மருத்துவமனையிலும் ஆய்வு நடத்தினேன். சிறை கைதிகளிடம் பேசியபோது, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி பரிசீலனை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறினேன்.

சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்து வருகிறார்கள். அவர்கள் செய்யும் பணியை முறையாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். சிறையில் கைதிகள் யாருக்கும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அனைவரும் சாதாரண கைதிகள் போல் நடத்தப்பட்டு வருகிறார்கள்.

நவீன கண்காணிப்பு கேமராக்கள்

சிறையில் கைதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டு உள்ளேன். முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கையாக சிறையில் கூடுதலாக நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க சிறை வளாகத்தில் கூடுதலாக ஜாமர் கருவிகள் பொருத்தவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

--–

(பாக்ஸ்)சசிகலாவிடம் நலம் விசாரித்த மந்திரி ராமலிங்க ரெட்டி

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், ரூ.2 கோடி லஞ்சமாக பெறப்பட்டு சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று மந்திரி ராமலிங்க ரெட்டி சிறையில் ஆய்வு மேற்கொண்டபோது, பெண் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் பகுதிக்கு சென்றார். அப்போது அவர் சசிகலா உள்ள அறையை பார்வையிட்டார். சிறையில் உள்ள சசிகலாவிடம், மந்திரி ராமலிங்க ரெட்டி தமிழில் பேசி நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story