இலவச மனைப்பட்டா கேட்டு போராட்டம் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
இலவச மனைப்பட்டா கேட்டு நடந்த போராட்டத்தின்போது முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை பிரெஞ்சிந்திய பூர்வீக முதியோர் சங்கத்தினர் தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி அவர்கள் சங்க தலைவர் முனுசாமி தலைமையில் கடற்கரை சாலையில் உள்ள டூப்ளக்ஸ் சிலையருகே கூடினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்தநிலையில் முனுசாமி மண்எண்ணெய் கேனை எடுத்து எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒதியஞ்சாலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் அவரை மடக்கி பிடித்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.
மேலும் போராட்டத்திற்கு வந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் சிறிது நேரம் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.