வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...


வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...
x
தினத்தந்தி 13 Sept 2017 10:45 AM IST (Updated: 13 Sept 2017 10:43 AM IST)
t-max-icont-min-icon

முன்பெல்லாம் சீனா என்றால் 7 உலக அதிசயங் களில் ஒன்றான அதன் 21,196 கி.மீ. நீள பெருஞ்சுவர்தான் அனைவரது நினைவிற்கும் வரும்.

முன்பெல்லாம் சீனா என்றால் 7 உலக அதிசயங்களில் ஒன்றான அதன் 21,196 கி.மீ. நீள பெருஞ்சுவர்தான் அனைவரது நினைவிற்கும் வரும்.

தற்போதோ யாரையும் வம்புச் சண்டைக்கு இழுப்பதில் அதற்கு நிகர் யாரும் இல்லை என்ற எண்ணமே தோன்றுகிறது.

உலகில் ரஷியா, கனடாவுக்கு அடுத்ததாக பெரும் நிலப்பரப்பை கொண்ட சீனா தற்போது இந்தியா, தைவான், வியட்நாம், மலேசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், புருனை, பூடான் உள்ளிட்ட நாடுகளுடன் விரோத போக்கை கையாண்டு வருகிறது.

தென் சீனக் கடல் பகுதி எங்களுக்கு சொந்தமானது என்று இறையாண்மை உரிமை பேசுகிறது. இதனால் பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேஷியா, புருனை, வியட்நாம் ஆகியவை கொதித்து போய் உள்ளன.

கிழக்கு சீனக் கடல் பகுதியில் தைவான், தென்கொரியா, ஜப்பானை சீனா மிரட்டுகிறது.

தற்போது, சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் சாலை அமைத்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்தது. அதை தடுக்கும் இந்தியா மீது இறையாண்மை என்ற போர்வையில் போரை திணிக்க பார்த்தது.

இந்தியாவின் மீதான சீனாவின் எரிச்சலுக்கு பின்னணி காரணங்கள் பல உண்டு. 1950-ம் ஆண்டு திபெத்தை ஆக்கிரமித்து சீனா தன்னுடன் இணைத்துக்கொண்டது. அதை தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாகவும் அறிவித்தது.

அப்போது, 15 வயது ஆன்மிக தலைவரான தலாய்லாமா லாமோ டிரான்டிரப் (தற்போதைய 14-வது தலாய்லாமா) திபெத்திய அரசின் தலைவராக பதவியேற்றார். தன்னாட்சி அதிகாரம் வெறும் கண்துடைப்பு என்பதால் திபெத்தியர்கள் சீனாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதை 1959-ல் ராணுவ பலத்தால் முறியடித்த சீனா திபெத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் அங்கிருந்து தலைமறைவான தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது.

அந்த கோபம் சீனாவுக்கு இன்னும் தணியவில்லை. தலாய்லாமாவை சுற்றுப்பயணம் செய்ய அனுமதிக்கும் நாடுகளையெல்லாம் சீனா பகிரங்கமாகவே, கண்டிக்கிறது. உலக அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு 1989-ல் வழங்கப்பட்டபோது அவரை தேர்வு செய்ததற்காக நார்வே நாட்டையும் கண்டித்தது.

இந்தியாவின் அருணாசலபிரதேசம், சிக்கிம், இமாசலபிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்குள், 82 வயது தலாய்லாமா வந்தால், திபெத்துக்குள் புகுந்து ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்வார் என சீனா நொண்டிச்சாக்கும் கூறுகிறது.

தலாய்லாமாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டதை நிராகரித்ததால் 1962-ம் ஆண்டு இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. அப்போது இந்தியாவின் எல்லையில் சில ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா விழுங்கியது. (இருநாடுகளுக்கும் எல்லையில் உள்ள 3,380 கி.மீ. தூரத்தில் 2,100 கி.மீ. பிரச்சினைக்குரிய பகுதியாக இருக்கிறது)

அதன்பிறகு தொடர்ச்சியாக இதே தந்திரத்தை சீனா கையாண்டு வருகிறது. குறிப்பாக ஷின்பிங் அதிபராக பதவியேற்ற 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர் இது அசுர வேகத்தில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சீனாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை இந்தியா முந்திவிட்டதும் இதற்கு இன்னொரு முக்கிய காரணம்.

இப்படியே போனால் அடுத்த 10, 15 ஆண்டுகளில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கை ஓங்கி, வல்லரசு நிலையை எட்டிவிடும் என சீனா மிரள்கிறது. அதன்காரணமாகவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம் பெற்றுவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறது. அணுசக்தி பொருட்கள் வினியோக நாடுகள் குழுவிலும் (என்.எஸ்.ஜி) இந்தியா இணைவதற்கு முட்டுக்கட்டை போடுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு ஆசிய நாடுகளின் இரு தலைவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசினர். முதலில் ஜின்பிங், அதன்பிறகு மோடி. தனக்கு இணையாக இந்திய தலைவரை டிரம்ப் அழைத்து பேசியதை சீனாவால் ஜீரணிக்க முடியவில்லை என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஆசியாவில் தன்னைத் தவிர பெரிய அண்ணன் யாரும் இருக்கக்கூடாது என்ற சீனாவின் விருப்பம் வெளிப்படையாகவே தெரிகிறது. சிறிய அளவில் போர் நடந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் சரியும், அதன் வளர்ச்சி தடைபடும் என்பது சீனாவின் கணக்கு.

ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. அது சீனாவுக்கும் பொருந்தும்.

பதற்றமான டோக்லாம் பகுதியில் இருந்து இந்திய படைகளும், சீன படைகளும் பின்வாங்கி இருக்கின்றன. பிரதமர் மோடியின் சீன பயணத்தையொட்டி இந்த நடவடிக்கை என்றாலும் அந்தப் பிரச்சினை நீருபூத்த நெருப்பாகவே உள்ளது.

இந்த நிலையில் எந்த நேரமும் சீனாவுடன் போர் வரலாம் என்பதால் நமது படைகள் உஷாராக இருக்க வேண்டும் என்று இந்திய ராணுவ தளபதி கூறியிருப்பது நினைவு கூரத்தக்கது.

-லால்குடி மாயவன்


Related Tags :
Next Story