திருப்பூரில் 23 சாயப்பட்டறைகளுக்கு ‘சீல்’ வைப்பு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பூரில் 23 சாயப்பட்டறைகளுக்கு ‘சீல்’ வைத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் அருகே மாணிக்காபுரம் குளத்துக்கு வாய்க்காலில் சென்ற மழைநீருடன் கடந்த 7–ந் தேதி சாயக்கழிவுநீர் பாய்ந்தது. இதை கவனித்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் முதலிபாளையத்தில் உள்ள பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அருகில் உள்ள சாயப்பட்டறையாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அந்த விளக்கத்தை சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், முதலிபாளையத்தில் உள்ள பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், அதில் உறுப்பினராக உள்ள 23 சாயப்பட்டறைகளையும் மூடுவதற்கும், வாய்க்காலில் குழாய் உடைப்பை ஏற்படுத்தி சாயக்கழிவுநீர் கலந்த ஒரு சாயப்பட்டறையின் மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதற்கான உத்தரவை அந்தந்த சாயப்பட்டறைகள் மற்றும் பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை அனுப்பி வைத்தனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய திருப்பூர் மாவட்ட பொறியாளர் இளங்குமரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்றுகாலை முதலிபாளையத்தில் உள்ள பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்று அங்குள்ள எந்திரங்களுக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும் அந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உறுப்பினராக உள்ள 23 சாயப்பட்டறைகளுக்கும் சென்று அங்குள்ள எந்திரங்களுக்கும் அவர்கள் ‘சீல்’ வைத்தார்கள். ஒரு சாயப்பட்டறையின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டிப்பு செய்தனர்.
சம்பந்தப்பட்ட பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சாயப்பட்டறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.