கழிவறைகள் கட்ட அரசு வழங்கும் மானியத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்


கழிவறைகள் கட்ட அரசு வழங்கும் மானியத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
x

கழிவறைகள் கட்ட அரசு வழங்கும் மானியத்தை பொதுமக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா முகாமுக்கு தலைமை தாங்கினார். கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார் முன்னிலை வகித்தார். கலெக்டர் சுந்தரவல்லி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 370 பயனாளிகளுக்்கு ரூ.22 லட்சம் நலதிட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சுகாதார துறைக்கு முக்கியத்துவம் அளிக்கபட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு கொசுக்களை ஒழிக்க 1,110 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் விஷயத்தில் பொதுமக்களும் கவனம் செலுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொடுக்கப்படும் நிலவேம்பு குடிநீரை பொதுமக்கள் குடிக்க வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கழிவறைகளை கட்ட அரசு ரூ.12 ஆயிரம் முழு மானியம் வழங்கி வருகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தனித்துணை கலெக்டர் ஜானகிராமன், ஆர்.டி.ஓ.திவ்யஸ்ரீ, துயர் துடைப்பு தாசில்தார் லதா, துணை தாசில்தார் கதிர்வேல், வருவாய் ஆய்வாளர்கள் ரவி, ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story