குடும்பத்தகராறு காதல் திருமணம் செய்த பெண் அதிகாரி தீக்குளித்து தற்கொலை


குடும்பத்தகராறு காதல் திருமணம் செய்த பெண் அதிகாரி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 13 Sep 2017 10:30 PM GMT (Updated: 2017-09-14T01:59:01+05:30)

கும்மிடிப்பூண்டி அருகே குடும்பத்தகராறு காரணமாக பெண் அதிகாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி,

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஷ். இவரது மகள் லட்சுமி (வயது 29). இவர் சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்தார். சென்னை எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த செதில்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (38). இவர் சென்னையில் தங்கி வேலை செய்துகொண்டு படித்து வந்தார். அடிக்கடி எழிலகத்திற்கு வரும் முருகனுக்கும், லட்சுமிக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது.

லட்சுமிக்கும், முருகனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் காதல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு செதில்பாக்கம் கிராமத்திற்கு லட்சுமி சென்றார். குடும்ப பிரச்சினை தொடர்பாக தனது கணவரிடம் பேசினார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனவருத்தம் அடைந்த லட்சுமி கணவர் முருகனின் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள சாலைக்கு சென்று தன்னிடம் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கவலைக்கிடமான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த தற்கொலை குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story