திருவல்லிக்கேணியில் தனியாக இருந்த பெண் கொலையில் துப்பு துலங்கியது


திருவல்லிக்கேணியில் தனியாக இருந்த பெண் கொலையில் துப்பு துலங்கியது
x
தினத்தந்தி 14 Sep 2017 1:00 AM GMT (Updated: 13 Sep 2017 9:16 PM GMT)

சென்னை திருவல்லிக்கேணியில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி பற்றி துப்பு துலக்கிய போலீசார், அவருடன் நெருக்கமாக பழகி வந்தவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பழனியப்பன் 2-வது தெருவை சேர்ந்தவர் கலா (வயது 52). இவருடைய கணவர் துரை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவருடைய மூத்த மகன் கமல் (35) திருமணமாகி சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார். இளைய மகன் ஜெயக்குமாரும் (23) கமல் வீட்டிலேயே தங்கி உள்ளார்.

திருவல்லிக்கேணியில் உள்ள வீட்டில் கலா மட்டும் தனியாக வசித்து வந்தார். அவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்தநிலையில் கலா கடந்த 8-ந் தேதி இரவு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த 10 பவுன் வளையல் உள்பட 40 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் நகைக்காக கலா கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கொலையாளிகளை பிடிக்க, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பர்வேஸ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கியபிரகாசம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, சிவசுப்பு ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளி பற்றி துப்பு துலங்கியது.

கலாவுடன் நெருங்கி பழகிய அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (52) என்பவரை போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர். கலா கொலை செய்யப்பட்ட தினத்தன்று அவரது வீட்டில் பன்னீர்செல்வம் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

பன்னீர்செல்வம், கலாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு விட்டதாக தெரிகிறது. கலாவிடம் கொள்ளைபோன நகைகள் மீட்கப்பட்ட பிறகு பன்னீர்செல்வம் கைது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story