அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் சமையல் செய்து சாப்பிட்டனர்


அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் சமையல் செய்து சாப்பிட்டனர்
x
தினத்தந்தி 13 Sep 2017 10:45 PM GMT (Updated: 13 Sep 2017 9:19 PM GMT)

சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர்.

சேலம்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி முதல் ஜாக்டோ-ஜியோ என்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தம், சாலை மறியல் ஆகிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 1,100 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகத்திற்குள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் வளாகத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டனர்.

பிச்சை எடுத்த ஆசிரியர்

இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை இரவு, பகலாக சுழற்சி முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். யாரும் எங்களை அச்சுறுத்த முடியாது. கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றனர். இந்த போராட்டத்தால் அலுவலகங்கள் காலியாகி வெறிச்சோடி காணப்பட்டன.

எடப்பாடியை சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கந்தவேல் (வயது 40) என்பவர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உடலில் பட்டை நாமம் போட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியர்களின் பல ஆயிரம் கோடி ரூபாயை அரசு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. தற்போது இந்தநிலை என்றால் இன்னும் 20 ஆண்டுகளில் என்னென்ன மாதிரியான நிலை ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினேன் என்றார்.

கோர்ட்டு ஊழியர்கள்

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்திற்கு ஆதரவாக சேலம் கோர்ட்டு ஊழியர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3-வது நாளாக நேற்று ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட்டு நுழைவு வாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 

Related Tags :
Next Story