கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 14 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உணவு சமைத்து சாப்பிட்டனர்.

தர்மபுரி,

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையொட்டி தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

காத்திருப்பு போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கனகராஜ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பொன்ரத்தினம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கவுரன், பட்டுவளர்ச்சிதுறை அலுவலர் சங்க மாநில தலைவர் சிவப்பிரகாசம், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் ராஜராஜன், வீரமணி, முருகேசன், துரைராஜ், கவிதா, கேசவன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி அண்ணா குபேரன் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

இடைக்கால நிவாரணம்

அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய மாற்றத்தை அமல்படுத்தும் முன்பு 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை 2016-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

மதிப்பூதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றை ரத்து செய்து அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் காத்திருப்பு போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் அதே பகுதியில் பாத்திரங்கள் வைத்து உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். 

Related Tags :
Next Story