கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 14 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1, 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஜாக்டோ-ஜியோவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஜாக்டோ-ஜியோ குழுவினர் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் பெரியார் சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதையடுத்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள் 13-ந் தேதி (அதாவது நேற்று) முதல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு காலை முதலே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அங்கு மாற்றுத்திறனாளி அலுவலகம் அருகே அவர்கள் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

வாக்குவாதம்

இதையடுத்து 10.30 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்கள் சிலர் கூட்டமாக வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் மறித்தனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில் நடத்தும் காத்திருப்பு போராட்டத்தில் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அங்கேயே சமைத்தனர். இது குறித்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில், “எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் இங்கேயே சமைத்து சாப்பிட்டு காத்திருப்போம்” என்றார்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 1, 300 பேரை மதியம் 2 மணியளவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளிபிரியா மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.


Related Tags :
Next Story