கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்- அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்- அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 14 Sept 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்-அரசு ஊழியர்கள் 756 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்-அரசு ஊழியர்கள் கடந்த 7-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல கரூரில் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தொடர்பாளர் வேலுமணி தலைமை தாங்கினார். கலெக்டர் அலுவலகம் முன்பு கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சிலர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் உள்ளே சென்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வெளியே சென்று போராட்டம் நடத்தும்படி அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையில் கலெக்டர் அலுவலகம் எதிரே சாமியானா பந்தல் அமைக்கப்பட்டது. அந்த பந்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாற்காலியில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் உயர் அதிகாரிகள் மதியம் 1 மணி அளவில் உத்தரவிட்டனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், பிருத்விராஜ் மற்றும் போலீசார் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 505 பெண்கள் உள்பட 756 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் போலீஸ் வேன் மற்றும் பஸ்களில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு காத்திருப்பு போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மதிய உணவை போராட்டக்குழுவினர் தயார் செய்தனர். அந்த உணவை போலீசார் வேனில் எடுத்து சென்று ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வினியோகித்தனர். முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

Related Tags :
Next Story