‘அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்டாமல் விடமாட்டோம்’ முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேச்சு


‘அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்டாமல் விடமாட்டோம்’ முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேச்சு
x
தினத்தந்தி 13 Sep 2017 11:00 PM GMT (Updated: 13 Sep 2017 9:22 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்டாமல் விடமாட்டோம் என்று வேலூரில் நடந்த ‘நீட்’ தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

வேலூர்,

‘நீட்’ தேர்வை எதிர்த்து அனைத்து கட்சிகள் சார்பில் 13-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது:-

இதற்கு முன்பெல்லாம் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் மருத்துவ படிப்பில் சேரலாம். அதைவிட குறைவான மதிப்பெண் பெற்றால் என்ஜினீயரிங் படிப்பில் சேரலாம். தற்போது 1200-க்கு 1,190 மதிப்பெண் பெற்றால்கூட மருத்துவ படிப்பில் சேரமுடியவில்லை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவ படிப்பில் சேரலாம்.

‘நீட்’ தேர்விலும் நாம் படித்த பாடத்தில் கேள்வி கேட்டால் பதில் எழுதலாம். ஆனால் படிக்காத பாடத்தில் இருந்து கேள்விகேட்டால் எப்படி பதில் எழுதமுடியும். இதனால் மாணவர்கள் துயரத்தில் உள்ளனர். பெற்றோர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். 1176 மதிப்பெண் பெற்ற மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது வெளியே தெரிந்த ஒன்று. இதேபோன்று வெளியே தெரியாமல் அதிக சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

செயல்திறனற்ற அரசு

இதற்கு நீட் தேர்வை கொண்டுவந்த மத்திய அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும்தான் காரணம். இதுபற்றி கேட்டால் நீட்தேர்வை காங்கிரஸ் அரசுதான் கொண்டுவந்தது. அப்போது தி.மு.க. அதன் தோழமை கட்சியாக இருந்தது என்று கூறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வை கொண்டுவந்தபோது தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் நீட் தேர்வு கிடப்பில் போடப்பட்டது.

அந்த திட்டத்தை மோடி அரசு தூசி தட்டி கொண்டுவந்துள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்று நாங்கள் போராடிவருகிறோம். தமிழக அரசோ நீட் தேர்வு தொடர்பாக 412 பயிற்சி மையம் தொடங்கப்படும் என்கிறது. இந்த அரசு செயல்திறனற்ற அரசாக உள்ளது.

நீட்தேர்வுபற்றி கேள்வி கேட்டால் மு.க.ஸ்டாலினால் தி.மு.க.வுக்கே தலைவராக முடியவில்லை, அவர் எப்படி முதல்-அமைச்சராகமுடியும் என்று கேட்கிறார்கள். நாங்கள் என்ன கேட்கிறோம் என்பதே அவர்களுக்கு புரியவில்லை. எங்களுக்கு தலைவர் கருணாநிதி இருக்கிறார். அவர் இருக்கும்போது எதற்காக நாங்கள் வேறு தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும்.

ஜனநாயகத்துக்கு புறம்பானது

இந்த மைனாரிட்டி ஆட்சி சம்பந்தமாக பலமுறை கவர்னரை சந்தித்துவிட்டோம். இந்த அரசு நீடிக்க அனுமதிப்பது ஜனநாயகத்துக்கு புறம்பானது. கவர்னர் மத்திய அரசு சொல்வதுபடிதான் நடப்பார். இந்த அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடக்கோரி நாளை (இன்று) வழக்கு தொடரப்படும்.

தமிழ்நாட்டில் ஜாக்டோ- ஜியோ போராட்டம், போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம், மாணவர்கள் போராட்டம், அரசியல் கட்சிகளின் போராட்டம் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒருவரையாவது இந்த அரசு அழைத்து பேசியதா?.

இப்படிப்பட்ட ஆட்சியை அகற்றாமல் விடமாட்டோம். எத்தனை தடைகள் வந்தாலும் அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். சட்டமன்றத்தை கூட்டினால் 12 மணி நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத்தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story