10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: மேட்டூர் நீர்மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி தொடங்கியது


10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: மேட்டூர் நீர்மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி தொடங்கியது
x
தினத்தந்தி 13 Sep 2017 11:00 PM GMT (Updated: 13 Sep 2017 9:22 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் நீர்மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி தொடங்கியது.

மேட்டூர்,

மகாபுஷ்கர விழாவையொட்டி காவிரி ஆற்றில் நீராட வரும் பக்தர்களின் வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இவ்வாறு திறந்து விடப் படும் தண்ணீர், அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையம் வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது. இதன்காரணமாக இந்த நீர்மின்நிலையங்களில் மின் உற்பத்தி நேற்று தொடங்கி உள்ளது. இதேபோல் காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி உள்பட 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கதவணை மின்நிலையங்களில் தலா 30 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

நீர்வரத்து குறைந்தது

அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் ஓடுகிறது. நேற்றைய நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,165 கனஅடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைந்து வரும் நிலையில், தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது.

நீர்வரத்து மேலும் குறையுமானால் அணையின் நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 77.33 அடியாக இருந்தது. நீர்வரத்து குறைந்து அணை நீர்மட்டம் சரிய தொடங்கினால் சம்பா சாகுபடிக்கு பாசன தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போய்விடுமோ? என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். 

Next Story