கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் 385 பேர் கைது


கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் 385 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 14 Sept 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று 7-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன.

இதைத் தொடர்ந்து நேற்று முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பவுல் ஆபிரகாம், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்க பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாவட்ட தலைவர் பிரான்சிஸ் ஹென்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஜெயபால், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் தமிழரசன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு, மூட்டா சிவஞானம், பூமாரி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பூசைத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று மாலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தூத்துக்குடி புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதில் 135 பெண்கள் உள்பட 385 பேரை போலீசார் கைது செய்து மடத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். 

Related Tags :
Next Story