தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை அதிகபட்சமாக 52 மில்லி மீட்டர் பதிவானது


தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை அதிகபட்சமாக 52 மில்லி மீட்டர் பதிவானது
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 14 Sept 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 52 மில்லி மீட்டர் பதிவானது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தூத்துக்குடியில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி. ரோடு, தெற்கு ராஜா தெரு, ரெயில்நிலைய ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றன.

இந்த தண்ணீரில் வாகனங்கள் மிதந்தபடி சென்றன. சிவந்தாகுளம் ரோட்டில் உள்ள அரசு மாணவ, மாணவிகள் விடுதி வளாகத்தில் நின்ற மரம் முறிந்து சுற்றுச்சுவர் மீது விழுந்தது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து சேதம் அடைந்தது. நேற்று பகல் முழுவதும் தொடர்ந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழையும் பெய்தது.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலை, கொல்லம்பரும்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதியில் திடீர் காட்டாற்று வெள்ளம் உருவானது. இந்த வெள்ளம் வழக்கமாக வழிந்து ஓடக்கூடிய ஓடையில் ஆங்காங்கே அடைப்புகள் இருந்தன. இதனால் அந்த வெள்ளம் திடீரென கொல்லம்பரும்பு ஊருக்குள் புகுந்தது. அங்கு இருந்த வீடுகளையும், பள்ளிக்கூடத்தையும் வெள்ளம் சூழந்தது. இதனால் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஊருக்குள் சுமார் 4 அடி தண்ணீர் தேங்கி நின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மைக்கேல் ஆண்டனி, மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் நசீர், உதவி செயற்பொறியாளர் அமலா, யூனியன் ஆணையாளர் சிவபாலன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாஸ்டின் வினு மற்றும் அலுவலர்கள் கொல்லம்பரும்பு கிராமத்துக்கு வந்தனர். அங்கு இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் நிரம்பி வந்த பஞ்சாயத்து யூனியன் குளத்தில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, மணல் மூட்டைகள் அடுக்கி கரை பலப்படுத்தப்பட்டது. நேற்று இரவு வரை இந்த பணி நீடித்தது.

கயத்தாறில் நேற்று காலை வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. வெயில் இல்லை. 11.30 மணி அளவில் லேசான தூறல் விழுந்தது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. மதியம் 1.15 மணி வரை சுமார் 1¾ மணி நேரம் நீடித்த இந்த பலத்த மழையால் ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் கோவில்பட்டியில் நேற்று காலை லேசான மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் மதியம் 2 மணி அளவில் இடி-மின்னலுடன் திடீரென பலத்த மழை பெய்தது.

சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த பலத்த மழையால் கோவில்பட்டி புதுரோடு சந்திப்பு, மாதாங்கோவில் தெரு சந்திப்பு, ஓடைக்கடை பகுதிகளில் மழை வெள்ளம் கடைகளுக்குள் புகுந்தது. ரோடுகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ரோட்டில் நடந்து சென்ற பாதசாரிகள் மீது மழை நீரை வாரி இறைத்தபடி வாகனங்கள் சென்றன. கயத்தாறு, கோவில்பட்டி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை தூத்துக்குடியில் அதிகபட்சமாக 52 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-

தூத்துக்குடி- 52, வேடநத்தம் -15, வைப்பார்-12, விளாத்திகுளம்-10, எட்டயபுரம்-9, கயத்தாறு-5, ஸ்ரீவைகுண்டம்-4, திருச்செந்தூர்-3, கோவில்பட்டி-2, சாத்தான்குளம்-1. 

Related Tags :
Next Story