கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 14 Sept 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

நெல்லை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பினர் கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பல்வேறு தொழிற்சங் கங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று கொண்டன. ஆனால் ஒருசில பெரிய சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த சங்கங்கள் சார்பில் கடந்த 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் முதல் நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். 2-வது நாளாக நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

3-வது நாளான நேற்று முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அதில் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. காலை 10 மணி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரத் தொடங்கினர். அங்கன்வாடி பணியாளர்கள் சீருடையில் வந்து இருந்தனர்.

சாமியானா பந்தலை தாண்டி கூட்டம் நிரம்பி வழிந்தது. அருகில் தரையில் போர்வையை விரித்து அமர்ந்து இருந்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி ஆகியோர் தலைமை தாங்கினர். தொடர்ந்து போராட்டம் நடந்தது. தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பெண் ஆசிரியர்கள் கழுத்தில் மண்டை ஓடுகளை அணிந்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. 

Related Tags :
Next Story