மாணவர்களின் நலன் கருதி தனியார் மருத்துவக்கல்லூரிகளின் நிர்வாகங்களை அழைத்து பேசுவோம்
மாணவர்களின் நலன் கருதி தனியார் மருத்துவக்கல்லூரிகளின் நிர்வாகங்களை அழைத்து பேசுவோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை பிரச்சினை தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு பெறுவது சம்பந்தமாக மாநில அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் புதுவை அரசுக்காக மருத்துவ கல்லூரிகளிடம் கலந்துபேசி மாநில அரசின் ஒதுக்கீட்டிற்காக 283 இடங்களை சென்டாக் மூலமாக பெற்றோம்.
புதுவை மாநில ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும் தான் அரசுக்கு அதிகாரம் உள்ளது. கடந்த ஆண்டு புதுவை மாநிலத்திற்கு நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்தது. அதன் அடிப்படையில் மாநில அரசின் இடங்களை சென்டாக் கவுன்சிலிங் மூலமாக எவ்வித புகாரும் இல்லாமல் மாணவர்கள் சேர்க்கை நடந்தது. மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வெளிப்படையாகவும், தகுதியின் அடிப்படையிலும் புதுவை சேர்ந்த மாணவ–மாணவிகளை கொண்டு நிரப்பப்பட்டுள்ளது.
நிர்வாக ஒதுக்கீட்டை பொறுத்தவரையில் மருத்துவ நிர்வாகமும், மருத்துவ கவுன்சிலிங் சம்பந்தப்பட்டது. இதனை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நிர்வாக ஒதுக்கீட்டில் தவறு நடந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மருத்துவ கவுன்சிங், ஓய்வு பெற்ற நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் ஆகியோருக்கு உண்டு.
மருத்துவ கவுன்சில் கடிதத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் விதிமுறைகளை மீறி மாணவர்கள் சேர்த்துள்ளனர். இதில் விதிமுறைகள் மீறி சேர்க்கப்பட்ட மாணவர்களை நீக்க வேண்டும் மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடவில்லை. இதற்கு மருத்துவ நிர்வாகம் தான் பதில் சொல்ல வேண்டும். இதற்கு மாநில அரசு பொறுப்பு ஏற்காது. மாணவர்கள் நலன் கருதி தனியார் மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகங்களை அழைத்து பேசுவோம்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.