பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவ– மாணவிகளுக்கு மாரத்தான் ஓட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவ– மாணவிகளுக்கு மாரத்தான் ஓட்டம்  கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Sept 2017 3:00 AM IST (Updated: 15 Sept 2017 1:02 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவ– மாணவிகள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. இதனை கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவ– மாணவிகள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. இதனை கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மினி மாரத்தான்

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி ‘‘மினி மாரத்தான்’’ ஓட்டப்போட்டி நேற்று நடந்தது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ –மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மினி மாரத்தான் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி மாநகராட்சி ஆணையாளர் குடியிருப்பு, போலீஸ் டி.ஐ.ஜி குடியிருப்பு பகுதி வழியாக திருச்செந்தூர் சாலை வரை சென்று அதே பாதையில் மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கை வந்தடைந்தது.

இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தகுதிச் சான்றிதழ்களும், கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழிப்புணர்வு

இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடும் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இளைஞர்களுக்கு எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ரத்தானம் செய்ய வலியுறுத்தும் வகையிலும் இந்த போட்டி நடத்தப்பட்டது என்றார்.

நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் ரேவதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் வீரபத்ரன், மாநகராட்சி நல அலுவலர் பொற்செல்வன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் அமலவாணன், மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் அப்துல் காதர், அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story