கடன் தொல்லையால் உடற்கல்வி ஆசிரியர் வி‌ஷம் குடித்து தற்கொலை


கடன் தொல்லையால் உடற்கல்வி ஆசிரியர் வி‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 15 Sept 2017 2:00 AM IST (Updated: 15 Sept 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே கடன் தொல்லையால் உடற்கல்வி ஆசிரியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வள்ளியூர்,

வள்ளியூர் அருகே கடன் தொல்லையால் உடற்கல்வி ஆசிரியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

உடற்கல்வி ஆசிரியர்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஞானதீபம் நகரை சேர்ந்தவர் பாபு இளங்கோ(வயது 51). இவர் வள்ளியூர் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ரெஜினா(45). இவர் வடக்கன்குளத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு மார்ஷா ரியோலின், ரெனிஷா தயாளின் என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மார்ஷா ரியோலின், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ரெனிஷா தயாளின், பணகுடியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடன் தொல்லை

பாபு இளங்கோ வள்ளியூர் ஞானதீபம் நகரில் புதிதாக இடம் வாங்கி வீடு கட்டி அதில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவர் புதிதாக வீடு கட்டுவதற்காக அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதாகவும், அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாபு இளங்கோ மனமுடைந்து காணப்பட்டார். மேலும் வேலைக்கு செல்லாமல் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார்.

வி‌ஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாபு இளங்கோ வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்போது பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ரெனிஷா தயாள், தனது தந்தை மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கத்தினரிடம் விவரத்தை கூறி கதறி அழுதார்.

உடனே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பாபு இளங்கோவை மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாபு இளங்கோ நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story