பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்விக்கு தனி கொள்கை மந்திரி உமாஸ்ரீ பேச்சு


பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்விக்கு தனி கொள்கை மந்திரி உமாஸ்ரீ பேச்சு
x
தினத்தந்தி 14 Sep 2017 9:30 PM GMT (Updated: 14 Sep 2017 8:16 PM GMT)

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்விக்கு தனி கொள்கை வகுக்கப்படும் என்று மந்திரி உமாஸ்ரீ கூறினார்.

பெங்களூரு,

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்விக்கு தனி கொள்கை வகுக்கப்படும் என்று மந்திரி உமாஸ்ரீ கூறினார்.

உரிமைகளை பாதுகாக்கவும்...

குழந்தைகள் உரிமை குறித்து தென் இந்திய அளவிலான மண்டல மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. மாநாட்டை சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:–

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் எதிர்காலத்தை செம்மைப்படுத்தவும் பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன. அந்த சட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்படுவது இல்லை. இருக்கும் சட்டங்களில் சில சட்டங்கள் மிகவும் பழமையானது ஆகும். அவற்றில் திருத்தங்கள் செய்யப்படுகிறது.

நிதி மிகவும் குறைவு

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 3–ல் ஒரு பங்கு குழந்தைகள் ஆவார்கள். அவர்களின் நலனுக்கு ஒதுக்கப்படும் நிதி மிகவும் குறைவு ஆகும். இந்த நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம். குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு காண மாநில அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

இவ்வாறு ஜெயச்சந்திரா பேசினார்.

தனி கொள்கை வகுக்கப்படும்

இதில் சிறப்பு விருந்தினராக கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி உமாஸ்ரீ கலந்து கொண்டு பேசியதாவது:–

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்விக்கு தனி கொள்கை வகுக்கப்படும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கவனத்தில் வைத்து இந்த கொள்கை உருவாக்கப்படும். குழந்தை திருமண தடை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இத்தகைய குழந்தை திருமணத்தை ஊக்குவிப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்கு அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. அனாதை குழந்தைகளை தத்து எடுத்து கொள்பவர்களின் வசதிக்காக சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. அனாதை குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுப்பதில் நாட்டிலேயே கர்நாடகம் 2–வது இடத்தில் உள்ளது. குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க பள்ளிகளில் பாலுடன் முட்டையும் வழங்கப்படுகிறது. இதனால் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு குறைந்து வருகிறது.

இவ்வாறு உமாஸ்ரீ பேசினார்.

நாட்டுக்கே மாதிரியாக உள்ளது

கர்நாடக மேல்–சபை தலைவர் சங்கரமூர்த்தி பேசுகையில், “குழந்தைகளின் உரிமை குறித்து நாட்டிலேயே கர்நாடக மேல்–சபையில் தான் அதிக நேரம் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் மந்திரிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினர். இது நாட்டுக்கே மாதிரியாக உள்ளது. மற்ற மாநிலங்களிலும் இத்தகைய விவாதங்கள் நடைபெற வேண்டும்’’ என்றார்.


Next Story