2 குழந்தைகளின் தாய் மர்ம சாவு: உடலை பிரேத பரிசோதனை செய்யாததை கண்டித்து சாலை மறியல்


2 குழந்தைகளின் தாய் மர்ம சாவு: உடலை பிரேத பரிசோதனை செய்யாததை கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Sept 2017 4:30 AM IST (Updated: 15 Sept 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

2 குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்யாததை கண்டித்து கடலூர் அரசு மருத்துவமனை எதிரே அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

நெய்வேலி அருகே உள்ள மேலக்குப்பம் ஆர்ச் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கும் கடலூர் அருகே கே.புதூரை சேர்ந்த ராதிகா (வயது 38) என்பவருக்கும் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு முத்துக்குமரன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த ராதிகா மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் ராதிகாவின் தம்பி ராஜ் குமார் நெய்வேலி தெர்மல் போலீசில், தன்னுடைய அக்காவை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக புகார் தெரிவித்தார். அதற்கு, முத்துக்குமரன் உள்பட 6 பேர் காரணம் என்றும் புகார் மனுவில் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இறந்த ராதிகாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நேற்று 2-வது நாள் ஆகியும் கடலூர் அரசு மருத்துவமனையில் ராதிகாவின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்யவில்லை. இந்த காலதாமதத்துக்கு போலீசாரும், டாக்டர்களும் தான் காரணம் என்று கூறி, உடனே அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்யக்கோரி கே.புதூரை சேர்ந்த ராதிகாவின் உறவினர்கள், கிராமமக்கள் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் நாளை காலை (அதாவது இன்று) ராதிகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பும் ஏற்பட்டது. 

Related Tags :
Next Story