பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை வனத்துறையினர் விரட்டினர்


பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை வனத்துறையினர் விரட்டினர்
x
தினத்தந்தி 14 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-15T02:05:29+05:30)

கொளப்பள்ளி அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை வனத்துறையினர் விரட்டினர்

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே மாங்கமூலா பகுதியில் நேற்று முன்தினம் ஒரு காட்டு யானை புகுந்தது. பின்னர் அங்கிருந்த பாக்கு, வாழை பயிர்களை தின்று சேதப்படுத்தியது. மேலும் அதே பகுதியில் விடிய விடிய நின்றிருந்தது. இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் காட்டு யானை நிற்பதை கண்டு பீதி அடைந்தனர். மேலும் தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள் பயிர்கள் சேதம் அடைந்து இருப்பதை கண்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வனச்சரகர் மனோகரன், வன காப்பாளர் நந்தகுமார் உள்பட வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் காட்டு யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

அதன் பின்னர் அந்த யானை அங்கிருந்து சென்று நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. அப்போது அங்கு பச்சை தேயிலை பறிக்க வந்த தொழிலாளர்கள் காட்டு யானை வருவதை பார்த்து அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓடினர். அங்கு வந்த வனத்துறையினர் மாங்கமூலா வனப்பகுதிக்கு காட்டு யானையை விரட்டினர். அதன்பின்னரே தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.

இதேபோல் அய்யங்கொல்லி அருகே நெல்லியாம்பதி கிராமத்துக்குள் காட்டு யானைகள் புகுந்தது. அங்கு பயிரிட்டு இருந்த மரவள்ளி கிழங்கு செடிகள் உள்ளிட்ட பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பின்னர் பிதிர்காடு வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டியடித்தனர். 

Related Tags :
Next Story