கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டம்


கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2017 4:30 AM IST (Updated: 15 Sept 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அதிகாரிகளும் போராட்டத்தில் குதித்தனர்.

கோவை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 7-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடக்கத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட னர். நேற்று முன்தினம் முதல் அவர்கள் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டிற்கு சென்றுவிட்டனர். எனினும் ஏராளமானோர் அங்கு அமர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலையிலும் மாவட்டத்தை சேர்ந்த ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பலர் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். நேரம் செல்ல செல்ல போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சாப்பாடு கொடுக்கும் வகையில், அங்கேயே சமையல் செய்வதற் காக பாத்திரங்கள், அடுப்புகள் மற்றும் காய்கறிகள், சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்கப் பட்டு அங்கேயே உணவு சமைக்கப்பட்டது. மதியம் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமர்ந்து இருக்கும் வகையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே தற்காலிக பந்தல்கள் அமைக்கப் பட்டன.

இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்கம், ஆசிரியர்கள், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சத்துணவு ஊழியர் சங்கம் உள்பட 27 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

தங்களின் போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்பதற்காக சிலர் தங்களது உடலில் பட்டை நாமம் வரைந்து தட்டு ஏந்தி பிச்சை எடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன், நேற்று காலையில் அவர்கள் கோர்ட்டு நுழைவு வாசல் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறியதாவது:-

நாங்கள் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இதுவரை அரசு எங்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசவில்லை. சில நாட்கள் போராட்டம் நடத்திவிட்டு பணிக்கு திரும்பிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடுவது இல்லை.

தற்போது அதிகாரிகளின் கார் டிரைவர்கள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். ஓரிரு நாட் களில் அரசுத்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் போராட்டத்துக்கு வந்துவிடுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் ஊதிய உயர்வு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகளும் நேற்று முதல் போராட்டத்தில் குதித்தனர்.இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் யாரும் நேற்று பணிக்கு செல்லவில்லை.

அனைவரும் தாங்கள் வேலை செய்து வரும் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகக்கூறி விடுமுறை விண்ணப்பத்தை கொடுத்துவிட்டு சென்றனர். போராட்டம் காரணமாக கிராம நிர்வாக அதிகாரிகளின் அலுவலகங்கள் மூடிக்கிடந்ததால், பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு கையெழுத்து பெற முடியாமல் சிரமப்பட்டனர்.

இது குறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் மொத்தம் 145 கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளனர். எங்கள் சங்க நிர்வாகிகள் எடுத்த முடிவின்படி நாங்கள் இன்று (நேற்று) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். யாரும் பணிக்கு செல்லவில்லை.

எங்களின் கோரிக்கைகள் ஏற்கும் வரை நாங்கள் பணிக்கு செல்வது கிடையாது. மேலும் நாங்கள் நாளை (இன்று) முதல் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story