கலெக்டர் அலுவலகம் முன்பு, 2-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு, 2-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2017 4:15 AM IST (Updated: 15 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையொட்டி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கி விடிய, விடிய நடந்தது. நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கனகராஜ், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பொன்ரத்தினம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கவுரன், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது, அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மதிப்பூதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றை ரத்து செய்து அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய மாற்றத்தை அமல்படுத்தும் முன்பு 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை 2016-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். போராட்டக்குழுவினருக்கு அதே பகுதியில் உணவு சமைத்து வழங்கப்பட்டது. 

Related Tags :
Next Story