காவல்துறை பயன்பாட்டிற்கு மொபைல் பாஸ்போர்ட் செயலி நாராயணசாமி தொடங்கி வைத்தார்
புதுவை காவல் துறையின் செயல்பாட்டிற்காக மொபைல் பாஸ்போர்ட் செயலியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி,
பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் அடங்கிய படிவத்தை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பதிவிறக்கம் செய்து, விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறைக்கு அனுப்பி வைப்பார்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா? குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா? என்பது பற்றிய விசாரணை அறிக்கையை ஆன்லைன் மூலமாகவும், தபால் மூலமாகவும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு போலீசார் அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்த நடைமுறைகளை முடிக்க 7 நாட்கள் வரை ஆகும். எனவே டிஜிட்டல் முறையில் அதாவது பேப்பர் இல்லாமல் காலதாமதத்தை குறைத்து விரைவாக பாஸ்போர்ட் கிடைக்க செய்ய வேண்டும் என்ற வெளியுறவுத்துறையின் அறிவுறுத்தலின்பேரில் புதுவை காவல்துறையின் பயன்பாட்டிற்காக மொபைல் பாஸ்போர்ட் என்னும் போலீஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டேப்லெட் மூலம்...
இதன்படி போலீஸ் விசாரணைக்கு வரும் விண்ணப்பத்துடன் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டிற்கு செல்லும் போலீஸ் அதிகாரிகள் மொபைல் பாஸ்போர்ட் செயலியை பயன்படுத்தி விண்ணப்பதாரரின் புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டேப்லெட்டில் சேகரித்து அதன் மூலமே பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்கள்.
இந்த மொபைல் பாஸ்போர்ட் என்ற செயலியின் தொடக்க விழா புதுவை சட்டமன்ற வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நேற்று நடந்தது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா வரவேற்றுப் பேசினார்.
நாராயணசாமி
விழாவில் கலந்துகொண்டு புதிய செயலியை முதல்- அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த காலங்களில் பாஸ்போர்ட் எடுப்பது என்பது மிகவும் சிரமானது. ஆனால் இப்போது குறுகிய காலத்திலேயே எடுத்து விடலாம். வெளிநாட்டில் புதுவையை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.
புதுவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு நாளைக்கு 100 முதல் 125 விண்ணப்பங்கள் வரை பெறப்படுகின்றன. அவர்களுக்கு விசாரணை முடிந்து 21 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வந்தது. இந்த புதிய செயலி மூலம் அந்த காலக்கெடு 10 நாட்களாக குறையும். தமிழகத்தில் கூட மாதத்துக்கு 8 ஆயிரம் விண்ணப்பங்கள்தான் பெறப்படுகின்றன. ஆனால் புதுச்சேரி அலுவலகத்தில் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை பெறப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
பெருநகரங்களில் உள்ள வசதி
சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அசோக் பாபு பேசும்போது, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் போன்ற பெருநகரங்களில்தான் இதுபோன்ற வசதிகள் உள்ளன. தற்போது இந்த வசதி புதுவை மாநிலத்துக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
விழாவில் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story