பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை


பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Sep 2017 9:00 PM GMT (Updated: 23 Sep 2017 12:43 PM GMT)

தூத்துக்குடி மாவட்ட விவசாய தேவைக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட விவசாய தேவைக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறி இருப்பதாவது;–

விவசாயம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளின் முக்கிய தொழில் விவசாயம். இந்த பகுதியில் விவசாயம் மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுகளில் உள்ள 4 கால்வாய்களில் தண்ணீர் வருவதன் மூலம் நடைபெறும். இதற்கு பாபநாசம் அணையில் இருந்து நீர் திறக்கப்பட வேண்டும்.

மருதூர் அணையில் உள்ள கீழக்கால்வாய் 18 வருவாய் கிராமங்களில் உள்ள 15 குளங்களில் நீர் நிரப்புவதற்கான கால்வாய். 15 குளங்களில் நிரப்பப்படும் நீரை பயன்படுத்தி 3 ஆயிரத்து 154 ஹெக்டர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. மேலக்கால்வாய் 23 வருவாய் கிராமங்களில் உள்ள 16 குளங்கள் நீர் நிரப்புவதற்கான கால்வாய். 16 குளங்களில் நிரப்பப்படும் நீரை பயன்படுத்தி 5 ஆயிரத்து 173 ஹெக்டர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.

ஸ்ரீவைகுண்டம் அணையில் உள்ள வடக்கு கால்வாய் 25 வருவாய் கிராமங்களில் உள்ள 7 குளங்களில் நீர் நிரப்புவதற்கான கால்வாய். 7 குளங்களில் நிரப்பப்படும் நீரை பயன்படுத்தி 5 ஆயிரத்து 181 ஹெக்டர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. தெற்கு கால்வாய் 29 வருவாய் கிராமங்களில் உள்ள 15 குளங்களின் நீர் நிரப்புவதற்கான கால்வாய். 15 குளங்களில் நிரப்பப்படும் நீரை பயன்படுத்தி 5 ஆயிரத்து 166 ஹெக்டர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. மொத்தத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணை கால்வாய்கள் மூலம் விவசாய ஆயக்கட்டு பகுதியில் 18 ஆயிரத்து 674 ஹெக்டரில் விவசாயம் நடைபெறும் போது தான் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இந்த ஆயக்கட்டு பகுதிகளில் பெரும் பகுதியில் நெல் சாகுபடியும், வாழை சாகுபடியும், ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் வெற்றிலை சாகுபடியும் நடைபெறுகிறது.

நிலத்தடி நீர்மட்டம்

தற்போதைய வறட்சியால் பிசான சாகுபடி சரியாக நடக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடும் பொருளாதார சிரமத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பாசன கால்வாய் பகுதிகளிலும், குளங்களிலும் குடிநீர் தேவைக்காக, குடிநீர்வடிகால் வாரியம், பஞ்சாயத்துகள், நகர பஞ்சாயத்துகள், நகராட்சி மூலம் ஆழ்துளை குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்கி வருகின்றனர். இந்த குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக அணையில் இருந்து முறையாக தண்ணீர் திறக்கப்படாததால் குளங்களில் தண்ணீர் நிரம்பாமல் இப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இப்பகுதிகளில் நிலத்தடி நீரில் உப்பு தன்மை அதிகரித்தள்ளது.

தண்ணீர் திறப்பு

எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டி உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. அதோடு வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் கடைசியில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்வது வழக்கம். மழைக்காலத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் பெரும் பகுதி தண்ணீர் கடலில் கலக்கும். குளங்களில் செய்யப்பட்டுள்ள குடிமராமத்து பணிகளின் மூலம் ஏற்பட்டுள்ள மேடு பள்ளங்களை உடனடியாக சரிசெய்து, குளங்கள் மற்றும் கால்வாய்களில் உள்ள ‌ஷட்டர்களை செப்பனிட்டு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபநாசம் அணையின் ஆயக்கட்டு பகுதிகளில் 52 சதவீதம் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான விவசாய காலமான பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறி இருந்தார்.


Next Story