விக்கிரமசிங்கபுரம் அருகே கரடி தாக்க முயன்றபோது உயிர் தப்பிய விவசாயி


விக்கிரமசிங்கபுரம் அருகே கரடி தாக்க முயன்றபோது உயிர் தப்பிய விவசாயி
x
தினத்தந்தி 23 Sep 2017 8:30 PM GMT (Updated: 23 Sep 2017 3:59 PM GMT)

விக்கிரமசிங்கபுரம் அருகே வடமலைசமுத்திரத்தில் கரடி தாக்க முயன்ற போது, விவசாயி உயிர் தப்பினார்.

விக்கிரமசிங்கபுரம்,

விக்கிரமசிங்கபுரம் அருகே வடமலைசமுத்திரத்தில் கரடி தாக்க முயன்ற போது, விவசாயி உயிர் தப்பினார். அப்போது கீழே வயலில் குதித்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.

விவசாயி

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள முதலியார்பட்டியை சேர்ந்தவர் முருகையா (வயது 65), விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம், ஊருக்கு அருகே உள்ள வடமலை சமுத்திரத்தில் உள்ளது. அந்த தோட்டத்தில் தற்போது வெண்டைக்காய், சீனி அவரைக்காய் பயிரிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் வியாபாரி வருவதற்கு முன் தயாராக, வெண்டைக்காய் பறிக்க தோட்டத்துக்கு சென்றுள்ளார். தோட்டமானது ரோட்டோரத்தில் இருந்து பள்ளத்தில் அமைந்துள்ளது.

கரடி தாக்க முயன்றது

தோட்டத்தில் உள்ள முள்வேலியை குனிந்து எடுக்க முற்பட்டுள்ளார். அப்போது பக்கத்து தோட்டத்தில் கரடி ஒன்று நின்றுள்ளது. இதனை முருகையா கவனிக்க வில்லை.

தன்னை தாக்குவதற்குதான் கீழே குனிந்து எதையோ எடுக்கிறார் என நினைத்த கரடி, முருகையாவை நோக்கி ஆக்ரோ‌ஷமாக கத்தியது. சத்தம் கேட்டதும் முருகையா திரும்பி வந்துள்ளார். அப்போது அங்கிருந்து கரடி வேகமாக ஓடிவந்து முருகையாவை தாக்க முற்பட்டுள்ளது.

உயிர் தப்பினார்

இதனை சற்றும் எதிர்பாராத முருகையா தன்னை காப்பாற்றிக் கொள்ள அருகே உள்ள வயலில் குதித்துள்ளார். இதில் அவருக்கு கைகளில் படுகாயமும், முதுகுத்தண்டில் பலத்த அடியும் ஏற்பட்டுள்ளது.

கீழே குதித்ததும் வலியுடன் திரும்பி பார்த்த போது, கரடியை காணவில்லை. அது அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். காயம் அடைந்த முருகையாவுக்கு அவரது வீட்டில் வைத்து நாட்டு வைத்தியம் பார்க்கப்பட்டது.

அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் பனை மரங்கள் உள்ளது. பனை மரங்களில் இருந்து கீழே விழுந்து கிடக்கும் பனம்பழங்களை சாப்பிடுவதற்காக இரவு நேரத்தில் கரடி வருவதாகவும், மேற்கு தொடர்ச்சி மலை அருகே தோட்டம் அமைந்துள்ளதால் அடிக்கடி வந்து செல்வதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story