திருப்பூர் பகுதியில் 15 வழித்தடங்களில் இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் திடீர் நிறுத்தம் பொதுமக்கள் பாதிப்பு


திருப்பூர் பகுதியில் 15 வழித்தடங்களில் இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் திடீர் நிறுத்தம் பொதுமக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2017 11:15 PM GMT (Updated: 2017-09-24T01:51:17+05:30)

திருப்பூர் பகுதியில் 15 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ்கள் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர்,

பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். மேலும் கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் தினமும் திருப்பூர் வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி செல்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் பஸ் போக்குவரத்தையே நம்பி உள்ளனர்.

அதிலும் திருப்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆண், பெண் தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களுக்கு தினமும் வந்து செல்வது வழக்கம். இவர்களின் வசதிக்காக கிராமங்கள் வழியாக செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகத்தின் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை, மாலை நேரங்களில் டவுன் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இதுதவிர பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ–மாணவிகளும் பஸ்சில் பயணம் செய்து வருகிறார்கள். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள். இவர்கள் திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தான் பஸ்கள் மூலமாக தினமும் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள்.

பள்ளி மாணவர்கள் முதல் தொழிலாளர்கள் வரை அனைவரும் தினமும் பயன்படுத்தி வந்த சில வழித்தடத்தில் இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் கடந்த ஒரு மாதமாக இயக்கப்படவில்லை. இதனால் அந்த வழித்தட பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

குறிப்பாக திருப்பூரில் இருந்து அனுப்பர்பாளையம், தொட்டிப்பாளையம் வழியாக கூத்தம்பாளையம் செல்லும் டவுன் பஸ், திருப்பூரில் இருந்து பாரதிபுரம் செல்லும் டவுன் பஸ், திருப்பூரில் இருந்து அவினாசி, பெருமாநல்லூர் வழியாக சென்று திருப்பூர் வரும் டவுன் பஸ், திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து போயம்பாளையம் வழியாக பொம்மநாயக்கன்பாளையம் செல்லும் டவுன் பஸ், திருப்பூரில் இருந்து பெருமாநல்லூர், கணக்கம்பாளையம் வழியாக நாதம்பாளையம் செல்லும் டவுன் பஸ், திருப்பூரில் இருந்து 15.வேலம்பாளையம், கணியாம்பூண்டி, சொர்ணபுரி ரிச் லேண்ட் வழியாக அவினாசி செல்லும் டவுன் பஸ், திருப்பூரில் இருந்து சாமுண்டிபுரம், சிறுபூலுவப்பட்டி, கணியாம்பூண்டி, வஞ்சிப்பாளையம் வழியாக மங்கலம் செல்லும் டவுன் பஸ் ஆகியவை இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுபோல் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லூர், அப்பியாபாளையம் வழியாக நம்பியூர் செல்லும் டவுன் பஸ், திருப்பூரில் இருந்து சிக்கண்ணா கல்லூரி, சிறுபூலுவப்பட்டி, சோளிபாளையம், கணியாம்பூண்டி, கோதபாளையம் வழியாக கருமத்தம்பட்டி செல்லும் டவுன் பஸ், திருப்பூர் கே.வி.ஆர். நகர், பெருமாநல்லூர், செங்கப்பள்ளி வழியாக பல்லகவுண்டம்பாளையம் செல்லும் டவுன் பஸ், மங்கலத்தில் இருந்து குமரன் கல்லூரி, கருவம்பாளையம், பழைய பஸ் நிலையம், நல்லூர், காசிபாளையம் வழியாக சிட்கோ செல்லும் டவுன் பஸ், திருப்பூரில் இருந்து வலையங்காடு, சிறுபூலுவப்பட்டி வழியாக காவிலிபாளையம் செல்லும் டவுன் பஸ், திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர், திருமுருகன்பூண்டி வழியாக அவினாசி செல்லும் டவுன் பஸ், பல்லடத்தில் இருந்து கவுண்டம்பாளையம், உகாயனூர், பொன்நகர், செட்டிப்பாளையம் வழியாக திருப்பூர் வரும் டவுன் பஸ் ஆகிய பஸ்களும் இயக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதுதவிர இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை திருப்பூரில் இருந்து அவினாசிக்கு மாறி, மாறி இயக்கப்படும் இரவு நேர டவுன் பஸ்சும் இயக்கப்படவில்லை. இந்த 15 வழித்தடங்களில் நிறுத்தப்பட்டுள்ள டவுன் பஸ்கள் பெரும்பாலும் கிராமப்புறங்கள் வழியாக சென்று வந்தவை ஆகும்.

இதன்காரணமாக கிராமப்புற பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் ஒன்றியக்குழு உறுப்பினர் மாரப்பன் கூறும்போது, கூத்தம்பாளையம், நாதம்பாளையம், திருமுருகன்பூண்டி வழித்தடங்களில் இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள், மாணவ–மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நிறுத்தப்பட்ட வழித்தட பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இதுகுறித்து திருப்பூர் மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, வருவாய் குறைவான வழித்தடங்களில் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றனர்.

வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் புறநகர் பஸ்களின் எண்ணிக்கையை குறைக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறநகர் பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி மற்ற நாட்களில் அந்த பஸ்களின் எண்ணிக்கையை குறைத்தால் வருவாய் இழப்பை தடுக்க முடியும். அதை விடுத்து கிராமப்புறங்கள் வழியாக செல்லும் டவுன் பஸ்களை நிறுத்துவது சரியல்ல என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கையை போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.


Next Story