திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களுக்கு நேர்காணல் 4,5,6-ந் தேதிகளில் நடக்கிறது


திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களுக்கு நேர்காணல் 4,5,6-ந் தேதிகளில் நடக்கிறது
x
தினத்தந்தி 23 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-24T02:13:44+05:30)

திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களுக்கான நேர்காணல் வருகிற 4,5,6-ந் தேதிகளில் நடக்கிறது என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 825 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், 42 குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், 671 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான நேர்காணல் கடந்த 5, 6 மற்றும் 7-ந்தேதிகளில் நடைபெற்றது. அப்போது பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் சரிவர சான்றிதழ்களை சமர்ப்பிக்காததால் மீண்டும் வாய்ப்பளிக்கும் விதமாக அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மீண்டும் நேர்காணல் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தனித்தனியாக நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்புகடிதம் அனுப்பப்படும். ஏற்கனவே நேர்காணல் நடைபெற்ற மையங்களிலேயே இந்த நேர்காணல் நடைபெறும்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு வருகிற 4-ந்தேதி (புதன்கிழமை) மற்றும் 5-ந்தேதி (வியாழக்கிழமை) நேர்காணல் நடைபெறும். குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நேர்காணல் நடைபெறும். கடந்த மாதம் 18-ந்தேதி வரை விண்ணப்பித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

நேர்காணலில் கலந்து கொள்ளக்கூடியவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல், பள்ளி இறுதி சான்றிதழ், வயது குறிப்புடன் பிறப்பு சான்றிதழ், சாதிசான்றிதழ், ரேஷன்கார்டு, இருப்பிடச்சான்று மற்றும் ஆர்.டி.ஓ.வால் வழங்கப்பட்ட ஆதரவற்ற விதவை சான்று, தாசில்தாரால் வழங்கப்பட்ட கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, விதவை சான்று, மாற்றுத்திறனாளி அடையாளஅட்டை, ஆண்வாரிசு இல்லாததற்கான சான்று, குடும்பத்தில் யாரேனும் மாற்றுத்திறனாளி எனில் அதற்கான அடையாள அட்டை போன்றவற்றிற்கான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story