கரடிபுத்தூர், அம்மனேரி ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்


கரடிபுத்தூர், அம்மனேரி ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 23 Sep 2017 11:15 PM GMT (Updated: 23 Sep 2017 8:46 PM GMT)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கரடிபுத்தூர் ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையத்தில் அம்மா திட்ட முகாம் தாசில்தார் ராஜகோபால் தலைமையில் நடந்தது..

கும்மிடிப்பூண்டி,

மண்டல துணை தாசில்தார் தாமோதரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லலிதா, வருவாய் ஆய்வாளர் சீனிவாசலு, முதியோர் உதவித்தொகைக்கான வருவாய் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கரடிபுத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் தனியார் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், அதனை அகற்றி தரும்படி தாசில்தாரிடம் அந்த பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தார்.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட தனியார் ஆக்கிரமிப்பாளர்கள் மீது பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திட அதிகாரிகளுக்கு தாசில்தார் ராஜகோபால் உத்தரவிட்டார் நிகழ்ச்சியில் முதியோர் உதவித்தொகை தொடர்பாக 68 மனுக்களும், பட்டா கோரி 15 மனுக்களும், 3 இதர மனுக்களும் சேர்த்து மொத்தம் 86 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 5 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை தாசில்தார் ராஜகோபால் வழங்கினார். மற்ற மனுக்கள் மீது பரீசிலனைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ்குமார் வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலாளர் ஐஸ்டின் நன்றி கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அம்மனேரி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பள்ளிப்பட்டு தாசில்தார் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். தனி தாசில்தார் சாந்தி, வட்ட வழங்கல் அலுவலர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன்கார்டு, திருமண உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் திருத்தம், வீட்டுமனை பட்டா, வங்கி கடன், பட்டா மாற்றம், நலத்திட்ட உதவிகள் கோரி 50 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 10 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீதி மனுக்கள் அனைத்தும் விசாரணைக்காக அந்தந்த துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த முகாமில் வருவாய் ஆய்வாளர் மகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் அன்பழகன், வெங்கடேசன், முதுநிலை அலுவலர் அற்புதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் ராமன்கோவில் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ராமன்கோவில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விமலாமூர்த்தி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் கல்பனா, அருள், பரணி, பாரதிபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் தாசில்தார் கார்குழலி, சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், வருமானச்சான்றிதழ், பட்டா நகல் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் வேண்டி 165 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது அங்கேயே தீர்வு காணப்பட்டு தகுதியுடைய பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் கிராம உதவியாளர் ரவி நன்றி கூறினார்.

Next Story