வழக்குகளை விரைவாக விசாரித்து நீதி வழங்க வேண்டும் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி பேச்சு


வழக்குகளை விரைவாக விசாரித்து நீதி வழங்க வேண்டும் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி பேச்சு
x
தினத்தந்தி 23 Sep 2017 11:15 PM GMT (Updated: 23 Sep 2017 8:47 PM GMT)

வழக்குகளை விரைவாக விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்று பரங்கிப்பேட்டையில் நடந்த நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.

கடலூர்,

பரங்கிப்பேட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு ரூ.2 கோடியே 86 லட்சத்து 76 ஆயிரம் செலவில் ‘குளு, குளு’ வசதியுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி கலந்து கொண்டு புதிய நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

இதன்பிறகு பரங்கிப்பேட்டை பீட்டர் தெருவில் உள்ள எஸ்.ஜி.எம். திருமண மண்டபத்தில் விழா நிகழ்ச்சிகள் நடந்தன. தொடக்கமாக முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பி.தனபால் வரவேற்று பேசினார். தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி புதிய நீதிமன்ற கட்டிடத்தின் கல்வெட்டை திறந்துவைத்து பேசினார். அவர் பேசியதாவது:–

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்ற முறையில் நீதித்துறை குடும்பத்தின் கீழ் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கிறேன். அந்த வகையில் வரலாற்று சிறப்பு மிக்க துறைமுகநகரான பரங்கிப்பேட்டையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று புதிய நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இங்குள்ள புராதன சிறப்பு மிக்க பழைய நீதிமன்ற கட்டிடத்தையும் பழமை மாறாமல் புதுப்பிக்குமாறு சட்டத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். நீதிமன்றங்கள் நீதி வழங்கும் மையங்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும்.

எனவே நீதிபதிகள் வழக்குகளை விரைவாக விசாரித்து நீதி வழங்க வேண்டும், அதேநேரத்தில் நீதியின் தரம் குறையக்கூடாது. நீதிபதிகள் யாருக்கும் சாதகமாக செயல்படக்கூடாது. யாருக்கும் பாகுபாடு காட்டக்கூடாது, முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும்.

வக்கீல்களும் நீதிமன்றத்தின் அங்கங்கள். மூத்த வக்கீல்கள் இளம் வக்கீல்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இளம் வக்கீல்கள் மூத்த வக்கீல்களைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் பாரம்பரிய மாண்புகளை இளம் வக்கீல்கள் கட்டிக்காக்க வேண்டும். அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி பேசினார்.

முன்னதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:–

உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று நீதிமன்றங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை அரசு செய்து கொடுத்து வருகிறது. இப்போது அரசாங்கத்தில் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் எதுவும் நிலுவையில் இல்லை. நீதிமன்றங்களில் பணியாளர் பற்றாக்குறையை போக்க 3,400 பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்றங்களே இல்லாத வட்டாரங்களில் சிறப்பு குற்றவியல் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று 115 சிறப்பு குற்றவியல் நீதிமன்றங்களை அமைக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஒரு சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது. சிதம்பரத்தில் ரூ.20 கோடியே 11 லட்சத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 38 நீதிமன்றங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்குகின்றன. நெய்வேலி, காட்டுமன்னார்கோவில் நீதிமன்றங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணி முடிவடைந்தால் அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்கும் மாவட்டம் என்ற பெருமையை கடலூர் பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், 1918–ம் ஆண்டு தொடங்கப்பட்ட பரங்கிப்பேட்டை நீதிமன்றத்துக்கு ‘குளு, குளு’ வசதியுடன் புதிய கட்டிடம் கட்டி திறக்கப்பட்டு உள்ளது. இது கடலூர் மாவட்டத்தில் ‘குளு, குளு’ வசதியுடன் திறக்கப்பட்ட 2–வது நீதிமன்றமாகும். கடலூரில் புதிதாக குடும்ப நல நீதிமன்றம் திறக்கவும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது என்றார்.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் விமலா, ஐகோர்டு நீதிபதிகளும், கடலூர் மாவட்ட நிர்வாக நீதிபதிகளுமான ஆர்.சுப்பையா, எம்.கோவிந்தராஜ், கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் பேசினார்கள். முன்னதாக பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பிரேம்சந்தர் திட்ட அறிக்கை வாசித்தார். விழாவில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், பரங்கிப்பேட்டை வக்கீல் சங்க தலைவர் பக்கிரிசாமி, செயலாளர் சேகர், அரசு வக்கீல் ரவீந்திரன், வக்கீல்கள் தியாகராஜன், சக்திவேல், பி.ஜே.எக்ஸ்.வேதநாயகம் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் சார்பு நீதிபதி பரமேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story