மாநில சுயாட்சி மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்று பேசியது வேடிக்கையாக உள்ளது ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


மாநில சுயாட்சி மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்று பேசியது வேடிக்கையாக உள்ளது ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 23 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-24T02:39:36+05:30)

திருமாவளவன் நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியது வேடிக்கையாக உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கிருஷ்ணகிரி,

அ.தி.மு.க. ஒரு மாபெரும் இயக்கம் ஆகும். இந்த இயக்கம் தான் தமிழ் மக்களுக்கு நிம்மதியை தந்தது. குடும்ப ஆட்சியில் சிக்கி தமிழக மக்கள் தவித்தனர். அவர்களுக்கு நிம்மதியை தந்தது இந்த ஆட்சி. எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. இருக்காது என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு மரண அடி கொடுத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. மன்னர் இல்லாவிட்டால் நாடு என்ன ஆகும்? என்று சில மங்குனிகள் நினைக்கிறார்கள். சோதனைகளையும் சாதனைகளாக மாற்றியது அ.தி.மு.க. அரசு. இந்த அரசின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். சில சுயநல அரசியல்வாதிகள் ஏதாவது பிரச்சினையை கிளப்பி இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்கலாம் என நினைக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரை எதிர்க்க திராணி இல்லாத தி.மு.க. தற்போது இந்த விழாவை எதிர்க்கிறார்கள். செம்மொழி என்கிற போர்வையில் நடத்தப்பட்ட குடும்பவிழா அல்ல இது. மக்களால் ஏற்றுக்கொள்ள கூடியது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா. சமீபத்தில் திருமாவளவன் நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது வேடிக்கையாக உள்ளது.

மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க. அப்போது அமைதியாக இருந்து விட்டு, தற்போது பேசுவது வேடிக்கையாக உள்ளது. பத்திரிகையாளர்கள் 3 பேரை எரித்து கொலை செய்த அரசு எங்கள் அரசு இல்லை. பலரது நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டது அல்ல எங்கள் அரசு. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட தி.மு.க. எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தார்.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த தீர்ப்பை ஜெயலலிதா பெற்று தந்தார். தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படும் போது, அதனை தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. ஆட்சியை கலைக்க விபரீத நட்பு தற்போது உருவாகி உள்ளது. ஏதாவது பிரச்சினைகளை உருவாக்கி வீழ்த்திட வேண்டும் என்கிற நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு உள்ளனர். ஆட்சியை பிடிக்க சதி திட்டம் தீட்டுபவர்களின் எண்ணம் எந்த காலத்திலும் நிறைவேறாது. அ.தி.மு.க. ஆட்சி 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும்.

இவ்வாறு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். 

Next Story