ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களுக்கான காலாண்டு ஆய்வு


ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களுக்கான காலாண்டு ஆய்வு
x
தினத்தந்தி 23 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-24T02:39:42+05:30)

புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களுக்கான காலாண்டு ஆய்வு புதுக்கோட்டையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான காலாண்டு ஆய்வு நேற்று புதுக்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி தலைமை தாங்கி ஆய்வை தொடங்கி வைத்தார்.

இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் பாலசுப்பிரமணியம், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, பொன்னமராவதி, திருமயம் ஆகிய தாலுகாவில் உள்ள 3-ல் ஒரு பங்கு தனியார் பள்ளி வாகனங்களை நேற்று ஆய்வு செய்தனர்.

இதில் 120 பள்ளி வாகனங்கள் கலந்து கொண்டன. இவற்றில் 8 வாகனங்களுக்கு முகப்பு விளக்கு, இருக்கை வசதி மற்றும் கட்டுமானத்தில் முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 8 வாகனங்களுக்கும் 7 நாட்களில் சரி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக், வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் நடராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக வட்டார போக்குவரத்து அலுவலர் பாலசுப்பிரமணியன் பள்ளி வாகன ஓட்டுனர்களை விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க அறிவுரைகளை வழங்கினார். 

Next Story