மணல் ஏற்றி வந்த 3 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்


மணல் ஏற்றி வந்த 3 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 23 Sep 2017 11:00 PM GMT (Updated: 23 Sep 2017 9:10 PM GMT)

மணிகண்டம் அருகே மணல் ஏற்றி வந்த 3 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

மணிகண்டம்,

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே துரைக்குடியை ஒட்டியுள்ள கோரையாற்று பகுதியில் இரவு நேரங்களில் லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று அதிகாலை மணல் ஏற்றிக்கொண்டு துரைக்குடி வழியாக 3 லாரிகள் சென்றன.

அதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்தனர். இது குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஸ்ரீரங்கம் தாசில்தார் சண்முகம், நாகமங்கலம் வருவாய் ஆய்வாளர் முத்துக்கமலம், கிராம நிர்வாக அலுவலர் சண்முகவடிவு மற்றும் மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த லாரிகளில் அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 லாரிகளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story