ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கர விழா நிறைவு நாளில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்


ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கர விழா நிறைவு நாளில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 23 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-24T02:41:43+05:30)

ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கர விழா நிறைவு நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

ஸ்ரீரங்கம்,

காவிரி மகா புஷ்கர விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று வந்தன. முதல் நாள் காரியசித்தி, தடங்கல்கள் நீங்க விஷ்வந்சேன இஷ்டி ஹோமமும், 2-ம் நாள் நன்மக்களைப்பெற சந்தான கோபால கிருஷ்ண இஷ்டி ஹோமமும், 3-வது நாளன்று சத்ரு பயம் நீங்க, ஆயுள் நீடிக்க, நினைத்த காரியங்கள் வெற்றி பெற சுதர்சன இஷ்டி ஹோமமும், நான்காம் நாள் லெட்சுமி நாராயண இஷ்டி ஹோமமும், 5-ம் நாள் தன்வந்திரி இஷ்டி ஹோமமும், 6-வது நாள் வைபவ இஷ்டி ஹோமமும், 7-வது நாள் ஸ்ரீயாகமும், 8-ம் நாள் மச்சநாராயண இஷ்டி ஹோமமும், 9-வது நாள் ஹயக்கிரீ வித்யா விஜய இஷ்டி ஹோமமும், 10-வது நாள் வீரலெட்சுமி இஷ்டி ஹோமமும், 11-வது நாள் சுதர்சன நரசிம்ம இஷ்டி ஹோமமும் நடைபெற்றது.

காவிரி மகா புஷ்கரத்தின் நிறைவு நாளான நேற்று காலை 9 மணிக்கு சர்வ சாந்தி நிலவ யாக சாலையில் தசாவதார இஷ்டி ஹோமம் நடைபெற்றது. மதியம் 12.30 மணியளவில் யாகசாலையில் முன் ஏற்றப்பட்டிருந்த கொடி இறக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் வேதவிற்பனர்கள் அனைத்து வேதங்களையும் பாராயணம் செய்தனர்.

இதனை தொடர்ந்து மதியம் 1.20 மணிக்கு யாகசாலையில் கடந்த 12 நாட்களாக பூஜை செய்யப்பட்ட சகல கலச தீர்த்தங்கள் நிரம்பிய கலசத்தை வேதவிற்பனர்கள் தலையில் சுமந்தபடி முன் செல்ல விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் அவரை தொடர்ந்து ஊர்வலமாக அம்மாமண்டபம் படித்துறையை சென்றடைந்தனர்.

அங்கு பகல் 1.30 மணியளவில் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் மற்றும் நைவேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் காவிரி தாய்க்கு மாலை மற்றும் புடவை சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கலசத்தில் இருந்த புனித நீர் காவிரி ஆற்றில் கலக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் புனிதநீராடி கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டனர்.

மாலை 6 மணியளவில் அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாயாருக்கு மஹா பூரண நட்சத்திர ஆரத்தி நடைபெற்றது. காவிரி மகா புஷ்கரத்தையொட்டி யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட ஆதிநாயக பெருமாள் மற்றும் ஆதிநாயகி தாயார் ஆகியோருக்கு இரவு 7 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இத்துடன் காவிரி மகா புஷ்கர விழா நிறைவடைந்தது. நிறைவு விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை காவிரி புஷ்கர பிரம்ம யக்ஞ கமிட்டியினர் செய்திருந்தனர். 

Next Story