உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 24 Sep 2017 6:22 AM GMT (Updated: 24 Sep 2017 6:21 AM GMT)

அவள் படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்தாள். பெற்றோர் அவளுக்கு வரன் தேடிக்கொண்டிருந்த நிலையில், அவளுக்கு இளைஞன் ஒருவன் காதல் வலை வீசினான்.

வள் படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்தாள். பெற்றோர் அவளுக்கு வரன் தேடிக்கொண்டிருந்த நிலையில், அவளுக்கு இளைஞன் ஒருவன் காதல் வலை வீசினான். அவன் அந்த பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவருக்கு கார் ஓட்டிக்கொண்டிருந்தான். ரவுடித்தனம் கலந்த வாழ்க்கை வாழ்ந்துவந்தான்.

எப்படியோ அவளுக்கும், அவனை பிடித்துவிட்டது. இருவரும் அடிக்கடி வெளியே சந்தித்து பொழுதுபோக்கினார்கள். அவர்களது காதல் விவகாரம், அவளது பெற்றோருக்கு தெரிந்தது. ‘அவன் நல்லவனில்லை. அவனோடு பழகாதே!’ என்று கட்டுப்பாடு விதித்தார்கள். கட்டுப்பாடுகள் அவளுக்கு பிடிக்கவில்லை. திடீரென்று ஒருநாள் அவள் வீட்டில் இருந்து காணாமல்போய்விட்டாள்.

தனது முதலாளியான அரசியல்வாதி உதவியோடு அவன், அவளை வெளியூருக்கு அழைத்துச்சென்றான். அங்கு ஒரு கோவிலில் மாலைமாற்றிக்கொண்டு, குடும்ப வாழ்க்கையை தொடங்கினார்கள்.

அடையாளம் தெரியாத அந்த ஊரில் அவனுக்கு சரியான வேலை அமையவில்லை. அதே நேரத்தில் பிரச்சினைக்குரிய நண்பர்கள் அவனோடு எளிதாக சேர்ந்துகொண்டார்கள். அவள் வேறு வழியில்லாமல் அந்த பகுதியில் உள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றில் சேல்ஸ் கேர்ள் வேலையில் சேர்ந்தாள். நிம்மதியில்லாமல் அவனோடு வாழ்ந்துகொண்டிருந்தாள்.

திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் அவள் தாய்மையடையவில்லை. அதனால் பரிசோதனைக்காக அவளை அங்குள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துசென்றான். பரிசோதித்த டாக்டர் அவளுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதனால்தான் தாய்மை தள்ளிப்போவதாகவும் கூறி, அவளுக்கு சிலவிதமான சிகிச்சைகளை பரிந்துரைத்தார். அதற்கு தேவையான பணம் இல்லாததால் அவள் சிகிச்சைக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் அவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானான். குழந்தையில்லாததை காரணங்காட்டி அவளை கொடுமைப்படுத்தினான். அவள் தனது தாய் வீட்டிற்கு போய் சேரட்டும் என்று சித்திரவதையும் செய்தான்.

கோவிலில் மாலைமாற்றிக்கொண்டு தாலிகட்டி வாழ்க்கையை தொடங்கிவிட்டதால், முறைப்படி திருமணத்தை பதிவு செய்திருக்கவில்லை. மேலும் அவள் தனது மனைவி என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லாமலும் அவன் பார்த்துக்கொண்டான். தனக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாத அளவுக்கு அவளை, தாய் வீட்டிற்கு அடித்து துரத்துவதே அவனது நோக்கமாக இருந்தது. ஆனால் அவளோ அத்தனை கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு அசையாமல் அவனுடனே இருந்தாள்.

தான் நினைத்தது நடக்காததால் ஆத்திரமடைந்த அவன், திடீரென்று ஒருநாள் அவளிடம் சொல்லிக்கொள்ளாமல் நண்பன் ஒருவனோடு சேர்ந்து வட மாநிலம் ஒன்றுக்கு சென்றுவிட்டான். மனைவியோடு எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.

அங்கு நான்கு வருடங்களை போக்கிவிட்டு, நோய்வாய்ப்பட்ட நிலையில் மனைவியைத் தேடி அவளை தவிக்கவிட்ட ஊருக்கு வந்தான். அவள் அதே ஊரில் ஓரளவு வசதியானவர்கள் வசிக்கும் பகுதியில் குடியிருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்றான். வீட்டைக் கண்டுபிடித்து கதவை தட்டியவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவன் மனைவி அங்கே நிறைமாத கர்ப்பிணியாக மலர்ந்த முகத்தோடு, பூசி மெழுகிய உடலோடு நின்று கொண்டிருந்தாள்.

‘தவிக்க விட்டுட்டு போனீங்க.. குழந்தை பெத்துக்க வக்கில்லாதவள்ன்னும் சொன்னீங்க.. அந்த வார்த்தை என்னை முள்ளாய் குத்திச்சி. இப்போ என்னை கல்யாணம் பண்ணியிருக்கிறவர், பக்கத்து ஊர் போலீஸ் ஸ்டேஷனில் வேலைபார்க்கிறார். என் கதை முழுசும் அவருக்கு தெரியும். அவர் கல்யாணமாகி, மனைவியை இழந்தவர். அவரோட குழந்தைதான் என் வயிற்றில் வளருது. எந்த சிகிச்சையும் இல்லாமல் நான் தாய்மை யடைஞ்சிருக்கேன். நீங்க என்னை கல்யாணம் செய்ததுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் பார்த்துக்கிட்டீங்க.. அதுவும் எனக்கு நல்லதாகிவிட்டது. நாங்க முறைப்படி பதிவு திரு மணம் பண்ணிக்கிட்டோம். இனி இந்த ஊர்பக்கமே எட்டிப்பார்த்திடாதீங்க.. அது உங்களுக்கு நல்லதில்லே..’ என்று கதவை அடைத்தாள்.

இப்படி சில பெண்கள் பதிலடி கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க!

- உஷாரு வரும்.

Next Story