பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு


பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 24 Sep 2017 10:30 PM GMT (Updated: 2017-09-25T00:42:49+05:30)

பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்ற மாணவன் தண்ணீர் மூழ்கி இறந்தான். நண்பனுடன் குளிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய மகன் பிரசன்னா (வயது 10). இவன் அம்மாபாளையம் அருகில் உள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணிக்கு பிரசன்னா தனது நண்பனுடன் அம்மாபாளையத்திற்கு அருகே செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்றான். அப்போது வாய்க்காலின் உள்ளே இறங்கியபோது இருவரையும் தண்ணீர் திடீரென்று இழுத்து சென்றது. அப்போது இருவரும் “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று சத்தம் போட்டுள்ளனர்.

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பிரசன்னாவின் நண்பனை மட்டும் காப்பாற்றி உள்ளனர். ஆனால் பிரசன்னாவை காப்பாற்ற முடியவில்லை. இதற்குள் பிரசன்னாவை தண்ணீரில் இருந்து மீட்க முடியவில்லை. அதற்குள் அவனை தண்ணீர் இழுத்து சென்றது. இதையடுத்து பிரசன்னாவின் உறவினர்கள், வாய்க்கால் முழுவதும் சென்றும் பிரசன்னாவை தேடிப்பார்த்தனர். ஆனாலும் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் பொங்கலூரை அடுத்த நடுப்பாளையம் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் பிரசன்னாவின் உடல் கிடப்பது தெரியவந்தது. இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று மாணவன் பிரசன்னாவின் உடலை மீட்டனர். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பனுடன் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்றபோது தண்ணீர் மூழ்கி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story