சிறையில் இருந்து தப்பி பிடிபட்ட கைதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


சிறையில் இருந்து தப்பி பிடிபட்ட கைதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 24 Sep 2017 11:00 PM GMT (Updated: 24 Sep 2017 9:17 PM GMT)

ஓமலூர் சிறையில் இருந்து தப்பி பிடிபட்ட கைதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மேச்சேரி,

மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் ஊராட்சி குப்பக்காளிபட்டி கண்ணாங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சாமிதுரை(வயது 22). இவர் கடந்த மாதம் 5-ந் தேதி மேச்சேரி பஸ் நிலையத்தில் பயணி ஒருவரிடம் பணத்தை பிக்பாக்கெட் அடித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஓமலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ள நிலையில், கடந்த மாதம் 8-ந் தேதி மதியம் ஓமலூர் சிறையில் இருந்து தப்பி சென்றார். பின்னர் அவர், அன்று இரவு நங்கவள்ளி அருகே குட்டப்பட்டி நாலுரோடு சின்னுசாமி என்பவரின் வீட்டில் இருந்து செல்போன் மற்றும் பணத்தை திருடிச்சென்று விட்டார்.

இது குறித்து சின்னுசாமி கொடுத்த புகாரின் பேரில், நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த செல்போன் எங்கு உள்ளது என்று செல்போன் டவர்கள் மூலம் கண்காணித்தனர். இதையடுத்து மறுநாள் காலையில் தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே பதுங்கி இருந்த சாமிதுரையை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருட்டு போன்ற குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததுடன், சிறையில் இருந்து தப்பிஓடி பிடிபட்ட சாமிதுரையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நங்கவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெரியார், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜன், சேலம் மாவட்ட கலெக்டருக்கு இது தொடர்பாக பரிந்துரைத்தார். அதன்பேரில் சாமிதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு சேலம் மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. 

Related Tags :
Next Story