தடுப்பூசி இல்லாத நோய் எல்லோருடைய கூட்டு முயற்சி இருந்தால்தான் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியும்


தடுப்பூசி இல்லாத நோய் எல்லோருடைய கூட்டு முயற்சி இருந்தால்தான் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியும்
x
தினத்தந்தி 1 Oct 2017 4:45 AM IST (Updated: 1 Oct 2017 1:32 AM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசியே இல்லாத நோய் டெங்கு காய்ச்சல் என்பதால் எல்லோருடைய கூட்டு முயற்சி இருந்தால் தான் அதை ஒழிக்க முடியும் என கடலூரில் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

கடலூர்,

தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே முன்னிலையில் மருத்துவமனையில் உள்ள ஆண்கள், பெண்கள் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் உள்நோயாளிகள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம் ஆகிய பிரிவுகளில் உள்ள நோயாளிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 234 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3 குழந்தைகள் உள்பட 12 பேர் டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காய்ச்சல் உள்ள நோயாளிகள் சிகிச்சை பிரிவில் கொசுவலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் தனித்தனியாக கொசுவலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. அனைத்து காய்ச்சல் நோயாளிகளுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

கடலூரை பொறுத்தவரை 24 மணிநேரமும் புறநோயாளிகளுக்கு பரிசோதனை நடைபெறுவது போல் தனியாக காய்ச்சலுக்கு 24 மணி நேரமும் நோயாளிகளை பரிசோதனை செய்ய தனி பிரிவாக இயங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி இல்லாத ஒரு நோய் டெங்கு காய்ச்சல் நோயாகும். வாழ்வாதாரத்தில் தண்ணீர் தேங்குவதால் டெங்கு காய்ச்சல் வருகிறது. டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிப்பதற்கு பொதுமக்களிடையே போதுமான அளவுக்கு விழிப்புணர்வு தேவை. எல்லோருடைய கூட்டு முயற்சியும் இருந்தால்தான் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியும்.

எனவே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், தொடர் நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 125 நாடுகளில் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு பொதுசுகாதாரத்துறை சார்பில் மக்கள்அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story