டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் விற்பனை செய்தால் நடவடிக்கை


டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் விற்பனை செய்தால் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Oct 2017 4:15 AM IST (Updated: 1 Oct 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சேலம்,

சேலத்தில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்தார். இவர் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் வார்டுகளை அமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தாமாகவே மருந்துகள் உட்கொள்ளாமல் அரசு ஆஸ்பத்திரிகளை நாடி வர வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு உரிய மருந்து அரசு ஆஸ்பத்திரிகளில் தான் அதிகளவு உள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும்.சில தனியார் ஆஸ்பத்திரிகள் சிகிச்சை அளித்துவிட்டு முடியாதபட்சத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுகின்றனர். இவ்வாறு செயல்படும் தனியார் ஆஸ்பத்திரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் மருந்து விற்பனை செய்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் செயல்படும் தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது ஆஸ்பத்திரி டீன் கனகராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story