தனியார் சொகுசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலை, குட்கா பறிமுதல்


தனியார் சொகுசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலை, குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 1 Oct 2017 4:30 AM IST (Updated: 1 Oct 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

தனியார் சொகுசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலை மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் தனியார் சொகுசு பஸ்சில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக திருவண்ணாமலை மாவட்ட குற்றப்புலனாய்வு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் இதுகுறித்து திருவண்ணா மலை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஒரு தனியார் சொகுசு பஸ்சில் இருந்து பெரிய அளவிலான அட்டை பெட்டிகள் இறக்கப்பட்டு சாலையோரம் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை சோதனை செய்தனர்.

அவற்றில் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலை, குட்கா பொருட்கள் இருந்ததும், திருவண்ணாமலை அய்யங்குளம் அக்ரகார தெருவில் உள்ள ஒரு ஏஜென்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் பறிமுதல் செய்த புகையிலை, குட்கா பொருட்களை ஒரு மினிலாரியில் ஏற்றி அக்ரகார தெருவுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது குறிப்பிட்ட அந்த ஏஜென்சிக்கு புகையிலை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் ஏஜென்சியையும், குடோனையும் சோதனை செய்தனர்.

இதையடுத்து காலியாக இருந்த அந்த குடோனிலேயே மினிலாரியில் கொண்டு சென்ற புகையிலை, குட்கா பொருட்களை வைத்து அதிகாரிகள் குடோனை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

மேலும் சில புகையிலை பொருட்களை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story