எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Oct 2017 4:30 AM IST (Updated: 1 Oct 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

சேலம்,

சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, செய்தி-மக்கள் தொடர்புத்துறை சார்பில் எம்.ஜி.ஆரின் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சியின் சாதனை குறித்த விளக்க படங்கள் இடம் பெற்ற புகைப்பட கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், கடம்பூர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி, பன்னீர்செல்வம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அமைச்சர்கள் மலர் தூவி வணங்கினர். பின்னர், எம்.ஜி.ஆர். ஆட்சியின் சாதனை புகைப்படங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் காய்கறி கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சி அரங்கில், காய்கறிகளால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் 6 அடி உயர சிலை, காய்கறி மற்றும் தர்ப்பூசணிகளால் எம்.ஜி.ஆர். உருவப்படங்கள் அனைவரையும் கவர்வதாக இருந்தது. மேலும், கத்தரிக்காய் கொண்டு உருவாக்கப்பட்ட யானை மற்றும் இதர உருவங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.

ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

சேலம் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில், ‘ஸ்மார்ட் சிட்டி‘ குறித்தும், அது எவ்வாறு அமைக்கப்பட உள்ளது என்றும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் புதிதாக திறக்கப்பட்ட சேலம் மாநகராட்சியின் புதிய கட்டிட மாதிரியும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சி குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷ் மற்றும் செயற்பொறியாளர்கள் அசோகன், காமராஜ், ரவி உள்ளிட்ட அதிகாரிகள் அமைச்சர்களுக்கு விளக்கினர்.

மேலும் வேளாண்மை பொறியியல் துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் காவல்துறை, சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை, ஆவின் பாலகம், கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆகியவை சார்பில் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.

கண்காட்சி அரங்குகள் அனைத்தையும் அமைச்சர்கள் பார்வையிட்டு புறப்பட்டு செல்லும்போது அவர்களிடம் நிருபர்கள் கேள்விகள் கேட்டனர். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

நாடே திரும்பி பார்க்கிற அளவிற்கு சேலத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நூற்றாண்டு விழாவில் முக்கிய அறிவிப்பினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார். தமிழகத்தில் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிந்தோம். அதை வரவேற்கிறோம். புதிய கவர்னர் நியமனம் என்பது ஜனாதிபதி எடுக்கும் முடிவாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Tags :
Next Story