வரைவு வாக்காளர் பட்டியல் 3-ந் தேதி வெளியீடு கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்


வரைவு வாக்காளர் பட்டியல் 3-ந் தேதி வெளியீடு கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்
x
தினத்தந்தி 30 Sep 2017 10:45 PM GMT (Updated: 30 Sep 2017 10:05 PM GMT)

கரூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் 3-ந் தேதி வெளியிடப்படுகிறது என கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கரூர்,

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம், 2018-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 18 முதல் 21 வயதிற்கு உட்பட்ட இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட 1.1.2018-ந் தேதியை தகுதியான நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 3-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) வெளியிடப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க படிவங்கள் 3-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது. வருகிற 7 மற்றும் 21-ந் தேதி சனிக்கிழமைகளில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் படித்து காண்பிக்கப்பட உள்ளது. வருகிற 8 மற்றும் 22-ந் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனுக்கள் பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதிக்குள் வாக்காளர் பதிவு அலுவலரால் மனுக்கள் மீதான நடவடிக்கை முடிவு செய்யப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 5-ந் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,012 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. ஒரு வாக்குச்சாவடி நிலை முகவர் ஒரு நேரத்தில் 10 மனுக்களை வாக்குச்சாவடி மைய அலுவலரிடம் அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த பணிக்காலத்தில் அதிகபட்சமாக 30 மனுக்களை அளிக்கலாம். மனுக்கள் அளிக்கும்போது மனுக்களில் உள்ள தகவல்கள் சரியானது என சான்றளிக்கப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரும் மனுதாரர் 21 வயதிற்கு மேற்பட்டவராயின், அவர் முன்பு சாதாரணமாக வசித்து வந்த முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணை கட்டாயம் படிவம்-6 மனுவில் குறிப்பிட வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் மற்றும் இடமாற்றம் செய்தல் தொடர்பாக வரிசை எண்கள் கொண்டுள்ள புதிய படிவங்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். மேலும் படிவத்தில் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை தவறாது குறிப்பிடவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவப்பிரியா, உதவி கலெக்டர்கள் சரவணமூர்த்தி, விமல்ராஜ், தாசில்தார்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story