சார்பதிவாளர் அலுவலக இடமாற்றத்தை கண்டித்து 3-ந்தேதி போராட்டம் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்


சார்பதிவாளர் அலுவலக இடமாற்றத்தை கண்டித்து 3-ந்தேதி போராட்டம் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 1 Oct 2017 4:15 AM IST (Updated: 1 Oct 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகம் மாற்றப்படுவதை கண்டித்து 3-ந்தேதி கடைஅடைப்பு போராட்டம் நடத்துவது என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 1882-ம் ஆண்டில் இருந்து சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 135ஆண்டு பாரம்பரிய மிக்க இந்த அலுவலகம் மன்னர் ஆட்சி காலத்தில் விசாரணை நீதிமன்றமாகவும் செயல்பட்டு வந்தது. கறம்பக்குடி தாலுகா தலைமையிடமாக மாறி உள்ள நிலையில், மக்கள் தங்களுக்குரிய சொத்துக்களை பதிவு செய்ய, வில்லங்க சான்று பெற, திருமண, நிறுவன பதிவு செய்ய இந்த அலுவலகத்தை பயன் படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள 50 சார் பதிவாளர் அலுவலகங்களை அருகில் உள்ள பதிவு அலுலங்களுடன் இணைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி கறம்பக்குடியில் செயல்படும் அலுவலகம், கந்தர்வகோட்டை சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட உள்ளது.

கடை அடைப்பு போராட்டம்

இதையடுத்து கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடியில் அனைத்து கட்சியினர், வர்த்தக, வியாபாரிகள் சங்கத்தினர், சமூகநல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வர்த்தக சங்க தலைவர் முகமது பாரூக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கறம்பக்குடியில் கடை அடைப்பு போராட்டம் மற்றும் பஸ்மறியல் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இதில் அ.தி.மு.க., தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க., விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இஸ்ஸாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வியாபாரிகள் சங்க தலைவர் சுரேஷ் நன்றி கூறினார். 

Next Story