கவர்னரின் செயலாளர் மகன்களுக்கு டெங்கு காய்ச்சல் ஜிப்மரில் தீவிர சிகிச்சை
புதுச்சேரி கவர்னரின் செயலாளர் மகன்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 பெண்கள் உள்பட 3 பேர் இதுவரை இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியின் செயலாளர் தேவநீதிதாசின் 2 மகன்களும் டெங்குவால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி நேற்று சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
அரசு துறை செயலாளர்கள், துறை இயக்குநர்கள், அவ்வப்போது தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவர்களின் பொறுப்பு ஆகும். முதுநிலை அதிகாரிகள் தங்களது உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகளை கீழ்நிலை அதிகாரிகளுக்கு உருவாக்கி தரவேண்டும். அதில் இருந்து விலகக்கூடாது. தேவைப்படும் இடங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உரிய அனுமதி பெறாமலும், பாதுகாப்பு இன்றியும் பறவை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிக்காக சென்ற போது நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக எந்த விபத்தும் ஏற்படாமல் அவர்கள் தப்பினர். இதற்கு உள்துறை சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தாததுதான் காரணம். கடலோர காவல்படை அனைவரையும் எச்சரித்து வருகிறது. ஆனால் இதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதுதொடர்பான கூட்டங்கள் நடந்தது. பதிவேடுகளை படித்து பார்த்தேன், இது சாதாரண விஷயம் இல்லை. தோல்விக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பை அவர்கள் தட்டிக் கழிக்க கூடாது. வரும்முன் காப்பதே பாதுகாப்பு என்பதை மனதில் கொள்ள வேண்டும். மும்பையை போல் இங்கு எதுவும் அசம்பாவித சம்பவம் நடந்துவிடக்கூடாது.
புதுச்சேரியில் பலகுடும்பங்களை சேர்ந்தவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறனர். முன்கூட்டியே சிறந்த முறையில் கொசு மருந்து அடித்து இருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. அதிக அளவில் மக்கள் மருத்துவமனையில் சேரவேண்டிய அவசியமும் ஏற்பட்டு இருக்காது. இது எனக்கு மனதில் மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. எனது செயலர் தேவநீதிதாசின் 2 மகன்களும் டெங்குவால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு காரணம் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சிகளின் திருப்தியற்ற பணிகளே காரணம். டெங்குவால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது கடவுளுக்குதான் தெரியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.