எழுமலை அருகே மொக்கத்தான்பாறை மலைவாழ் மக்கள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
எழுமலை அருகே உள்ள மொக்கத்தான்பாறை மலைவாழ் மக்கள் போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
உசிலம்பட்டி,
பேரையூர் தாலுகா சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் எழுமலை அருகே உள்ள துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்டது மொக்கத்தான்பாறை. இந்த கிராமத்தில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளை சுற்றிலும் தனி நபர்களின் பட்டா இடங்கள் உள்ளதால், கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி, மலைவாழ் மக்களின் காலனி ஒரு தீவு பகுதி போல உள்ளது.
இதுபற்றி அவர்கள் பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். எனவே மலைவாழ் மக்கள் தங்களது குடும்பங்களுடன் எம்.கல்லுப்பட்டி போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தகவலறிந்து வந்த பேரையூர் தாசில்தார் உதயசங்கர், வருவாய் ஆய்வாளர் கருப்பையா ஆகியோர் மலைவாழ் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். எங்கள் காலனிக்கு சென்றுவரும் சாலையில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து தொந்தரவு செய்கின்றனர். இதனால் எங்களுக்கு வழங்கியுள்ள பகுதியை மட்டும் நில அளவை செய்து பட்டா வழங்கவேண்டும். சாலையின் அளவையும் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறினர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் மலைவாழ் மக்களின் கழிவுநீர்களை கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
மேலும் அருகில் உள்ள நில உரிமையாளர்களிடம், சிமெண்ட்சாலையில் போடப்பட்டுள்ள மண் கரையினை உடனடியாக அகற்ற வேண்டும். அதுவரை மலைவாழ் மக்களுக்கு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்று கூறினர். இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்ததின் பேரில், போலீஸ்நிலையத்தில் இருந்து மலைவாழ் மக்கள் மொக்கத்தான்பாறைக்கு சென்றனர்.